திங்கள், 26 அக்டோபர், 2020
பேரண்டித்தின் நியதிகளும் வாழ்க்கையின் நுணுக்கப்படிவமும்
திங்கள், 7 செப்டம்பர், 2020
ஆன்லைன் வகுப்புகளை எப்படி நடத்தலாம்? கார்குழலி
புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியான கட்டுரை
இந்தக் கோவிட்-19 வீடடங்கு இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. உயர்நிலை வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளி கூடிய விரைவில் திறக்கும் என்பதுபோன்ற செய்திகள் கசிந்தாலும் மற்ற வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளி திறக்கும் சுவடே தெரியவில்லை. எதுவும் உறுதியற்ற இந்த நிலையில் எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளைப் பயன்தரும் வகையில் நடத்தலாம் என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுகிறது.
சமீபத்திய ஆய்வு ஒன்று இந்தியாவில் 56% குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என்று அறிவிக்கிறது. இந்திய மக்களின் வருமான நிலவரத்தைப் பார்த்தால் இந்தச் சதவீதம் இதைக்காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஸ்மார்ட்போன்களின் தரம் அவற்றின் விலையைப் பொறுத்து மாறுபடுகிறது. ரூ. 6000-த்திலிருந்து வாங்கலாம் என்றாலும் குறைந்த விலை போனின் தரம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. உறவினர் ஒருவருக்கு அவரிடம் படித்த மாணவர்கள் ரூ. 5000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அதை என்னிடம் கொண்டுவந்து இதில் வாட்சப், முகநூல் எல்லாம் போட்டுக்கொடு என்றார். முதலில் அதன் குறைந்த அளவு மெமரியினால் டெலிபோன் எண்களைக் கூட சேமிக்கமுடியவில்லை. மேலும் ஒரு சில ஆயிரங்களைப் போட்டு ஒரு மெமரி கார்டைப் போட்டால்தான் அதைப் பயன்படுத்தவே முடியும். அதில் இருக்கும் காமிராவின் பிக்ஸல் அளவும் அதன் தொடுதிரையின் ரிசொலுஷனும் என்ன தரத்தில் இருக்கும் என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்ளலாம்.
சரி, ஓரளவுக்கு முதல் போட்டு ஒரு 10000 ரூபாய்க்கு நல்ல போன் ஒன்றை வாங்கிவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம். அத்தோடு முடிந்ததா? அதற்கு டேட்டா பேக் போடவேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வேண்டுமென்றால் அதற்கு மாதம் ரூ. 250 மதிப்புக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். ஆனால் கல்வித்துறையின் பரிந்துரைப்படிஉயர்நிலை வகுப்புகளுக்கு 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். இதற்கு 1 ஜிபி டேட்டா போதுமா? வகுப்புகள் முடிந்த பிறகு பாடங்களும் குறிப்புகளும் வாட்சப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பிறகு குழந்தைகள் டெஸ்ட் அல்லது அசைன்மெண்டுகளை எழுதி ஆசிரியரின் பார்வைக்கு அனுப்பிவைக்க வேண்டியிருக்கிறது. இதற்குப் பிறகு, சும்மா வீட்டுக்குள் அடைந்து இருக்கும் நேரத்தில் பொழுதைப் போக்க பெரும்பாலான குழந்தைகள் இணையத்தைத்தான் நாடுகிறார்கள். நண்பர்களுடன் அரட்டை, நண்பர்களும் ஆதர்ச நடிக நடிகையரும் விளையாட்டு வீரர்களும் வேறு ஆளுமைகளும் அதிகமாகப் புழங்கும் இன்ஸ்டாகிராம், முகநூல், சினிமா தளங்கள் என எல்லாவற்றையும் பார்க்க 1 ஜிபி டேட்டா எப்படிப் போதும்? பல வீடுகளில் இரண்டு குழந்தைகளும் வகுப்புகளில் கலந்துகொண்டு படிக்கவேண்டி இருக்கிறது.
என்ன சொன்னாலும் சிறிய திரையைக்கொண்ட ஸ்மார்ட்போனில் தொடர்ச்சியாக முகநூலையும் வாட்சப்பையும் இணையத்தையும் மேய்ந்ததிலும் ஆன்லைன் கேம்ஸ் மற்ற விளையாட்டில் மூழ்கியதிலும் சிலரின் மூக்குக் கண்ணாடியின் பவர் அதிகமானதை மறுக்கவே முடியாது. பெரிய திரை கொண்ட மடிக்கணினியின் ஆரம்ப விலையே ரூ. 20000. எத்தனைக் குடும்பங்களில் ஏற்கனவே மடிக்கணினி இருக்கும்? எத்தனைக் குடும்பங்களால் இவற்றை உடனே வாங்கமுடியும். ஏற்கனவே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித்தான் குழந்தைகளைப் பெயர்பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் நடுத்தரக் குடும்பத்து மக்கள். இதில் மேல்செலவாக இதையெல்லாம் செய்ய பணத்துக்கு எங்கே போவது. வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருவர் இரண்டு குழந்தைகளையும் படிக்கவைக்க வருடத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்வதாகச் சொன்னார். குடும்ப வருமானம் வருடத்துக்கு 2 லட்ச ரூபாய்க்குள்தான். இந்தக் கொரோனா சமயத்தில் கணவன் மனைவி இருவருக்கும் வேலையில்லை. கிடைக்கும் சொற்பக் காசில் அரிசி பருப்பு வாங்குவார்களா? ஸ்மார்ட்போனும் மடிக்கணினியும் வாங்குவார்களா?
இதில் இன்னொரு உளவியல் சிக்கலும் இருக்கிறது. ஸ்மார்ட்போனை இதுவரை பொழுதுபோக்குக்குப் பயன்படுத்திப் பழகிவிட்டோம், நாமும் நம் குழந்தைகளும். இயற்கையாகவே குழந்தைகள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகிறார்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதுதானே மனித இயல்பு. வகுப்பு நேரத்தில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் கவனம் சிதறி அந்தப் போனிலோ கணினியிலோ வேறு இணையதளத்துக்குப் போய் நேரத்தைக் கழிக்கலாம். குழந்தைகளைச் சொல்லப் போய்விட்டோமே. கணினியில் வேலை செய்யும்போது எத்தனை கவனச்சிதறலை எல்லாம் தெரிந்த பெரியவர்களான நாம் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. சில மணித்துளிகளுக்கு ஒரு முறை வாட்சப்பையும் முகநூலையும் எட்டிப் பார்க்காமல் கண்ணைக் கட்டிக்கொண்டு வேலை பார்க்கமுடிகிறதா நம்மால்?
தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி இருக்கிறது. ஏற்கனவே, சில வகுப்புகளுக்கு தொலைக்காட்சி வழியாகப் பாடங்கள் நடத்தவும்படுகிறது. இது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்றாலும் கவனம் சிதறாமல் மாணவர்களுக்கு 'ஆன்லைன் வகுப்புகளை' நடத்துவதற்கான உத்திகளை ஆசிரியர்களும் கல்வியாளர்களும் மின்வழிக்கற்றல் (Elearning) நிபுணர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒரு மேசையில் அமர்ந்து விவாதித்துப் பலனளிக்கும் வழிமுறைகளைப் பட்டியலிடவேண்டும்.
தொலைக்காட்சிப் பாடங்களைத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கேட்க வேண்டுமென்றால் அவற்றில் இசை, நடனம், எளிய உடற்பயிற்சிகளையும் இணைக்கவேண்டும். கூடவே உடலையும் கை காலையும் அசைப்பதற்கு 15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வகுப்பில் சிறிய இடைவேளை கொடுக்கவேண்டும். ஆசிரியர் வகுப்பில் குழந்தைகளிடம் நேரடியாகப் பேசுவதுபோலவே பேசலாம். பழைய தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பேராசிரியர் நன்னன் அவர்கள் இப்படித்தான் பேசுவார். இது ஒரு ஆசிரியரோடு குழந்தைகளுக்கு ஒட்டுதலை ஏற்படுத்தும். அவ்வப்போது குட்டிக்கதை, நகைச்சுவை துணுக்கு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். வானொலியில் தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்களின் 'இன்று ஒரு தகவலை' தவறாமல் கேட்டது இதற்குத்தானே.
இந்தக் கவன ஈர்ப்பு உத்திகள் எல்லோருக்கும் எளிதில் கைவராது. எனவே, இவற்றை எங்கே எப்படிச் செய்யலாம் என்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவது அவசியம். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் முடிவுகள் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே இந்த மின்வழி அல்லது தொலைக்காட்சிவழிக் கற்றல் முறைகளுக்கு ஆசிரியர்களைத் தயார்செய்வது இன்றியமையாதது ஆகிறது. இதை அரசாங்கமும் கல்வித் துறையைச் சார்ந்த நிபுணர்களும் கல்வியாளர்களும்தான் முன்னெடுக்க வேண்டும்.
"அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற மகாகவி பாரதியின் சொல்லை மனதில் வைக்கவேண்டும். நம் குழந்தைகள்தான் வருங்காலத்தின் தூண்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஐம்பதாண்டு காலமாகத் தமிழ்நாட்டுத் தலைவர்கள் கட்டிவளர்த்த எல்லோருக்கும் கல்வி என்ற சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் இடிந்துவிடாமல் பேணி அதை நம் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் படிக்கற்களாக மாற்றவேண்டும். எல்லோரும் ஒன்றாகக் கைகோர்த்து செயல்படவேண்டும்.
#Puthiya_Thalaimurai
# புதிய_புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியான கட்டுரை தலைமுறை_இணையதளம்
கற்றல் வழிமுறையில் மாற்றங்கள் - காலத்தின் தேவையா? கார்குழலி
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகையே தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது ஒரு நுண்ணுயிரி. உணவுச் சங்கிலியின் முதலிடத்தில் இருக்கிறோம் உலகே தனக்குக் கீழேதான் என்ற ஆறறிவு கொண்ட மனிதனின் இறுமாப்பு தவிடுபொடியாகி இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்களும் தொழில்நிறுவனங்களும் கல்விச்சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள் பிள்ளைகளின் கல்வி கற்பிக்கும் வழியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் போலவே தொழில்நிறுவனங்கள் பணியாளர்களின் திறன் வளர்க்கும் கற்றல் வழிமுறைகளிலும் பல மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கின்றன.
கடந்த சில வாரங்களில் இணையவழிக் கற்றல் என்பது எல்லோருடைய வாயிலும் நுழைந்து வெளியே வந்துகொண்டிருக்கும் ஒரு சொற்றோடொராக மாறிவிட்டிருக்கிறது. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இருக்கும் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இணையவழியில் பாடம் சொல்லிக்கொடுக்கும் முயற்சிகள் பரவலாக நடந்துவருகிறது. இது தேவையா? எந்த வயதிலிருந்து பிள்ளைகளால் கற்பிக்கும் ஆசிரியரை நேரில் பார்க்காமல் அவர் சொல்லித் தருவதை உள்வாங்கிக் கொள்ளமுடியும்? ஏற்கனவே வறுமையிலும் அடிப்படை வசதியில்லாமலும் வாடும் மாணவர்களுக்கு இது சாத்தியமா? வசதியும் வாய்ப்பும் இருந்தாலும் தொழில்நுட்ப விழிப்புணர்வும் இல்லாத பெற்றோர் தொழில்நுட்பம் சார்ந்த சவால்களை எப்படி எதிர்கொள்வார்கள்? என்பதெல்லாம் விவாதத்துக்கு உள்ளாக்கப்படவேண்டிய விஷயங்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த விவாதத்தை கல்வி நிபுணர்களும் ஆர்வலர்களும் முன்னெடுத்து நடத்திக்கொண்டிருப்பது இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவையான ஒன்று. ஏனெனில், இது வரையிலும் இணையவழிக் கற்றல் பெரும்பாலும் வயதுவந்தோருக்குப் பலனளிக்கும் கற்றல் வழிமுறையாகத்தான் இருந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அது ஒரு இணை (complementary) அல்லது துணை (supplementary) கற்றல் வழிமுறையாகத் தான் பரிந்துரை செய்யப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கற்பதுதான் முதன்மை வழிமுறையாக இருக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை.
இருந்தாலும் இணையவழிக் கற்றல், வீடியோ செயலி, கருத்தரங்கம் என்பதெல்லாம் ஏதோ கடந்த ஓரிரு மாதங்களில் இந்தக் கோவிட்-19 நெருக்கடியினால் அவதாரம் எடுத்திருக்கும் புதிய வழிமுறைகள் அல்ல. மின்வழிக்கல்வி அல்லது மின்கற்றல் (eLearning) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின்போது இராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக உருவாகிய ஒரு கற்றல் முறை. வீட்டுக் கணினிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது மின்வழிக் கற்றலும் கூடவே நுழைந்தது. இணையப் புரட்சி நடைபெற்ற 1990-களில் வயதுவந்தோருக்குத் தொழில்நுட்பத்தில் பயிற்சியளிக்க அதிகாரபூர்வ கல்வி கற்பிக்கும் அல்லது கற்றல் முறையாக வேரூன்றியது. மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழங்களில் வயதுவந்தோருக்கான கற்றல் உத்தி (adult learning methodology) மற்றும் பயிற்றுமுறை வடிவமைப்பு (instructional design) சார்ந்த துறைகள் பல வருடங்களாக அங்கீகாரமும் ஒப்புதலும் பெற்று இயங்கி வருகின்றன. இந்தியாவில் இந்தத் துறையில் பட்டயக் (diploma) கல்வியும் சான்றும் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் பெறமுடியும் என்றாலும் பல்கலைக்கழங்களில் அங்கீகரிக்கப்பட்ட துறையாக அமைக்கப்படவில்லை.
மெல்ல அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரிவோருக்கு ஒவ்வொரு நிலையிலும் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு நிலையிலும் பிரிவிலும் இருக்கும் பணியாளர்களுக்கென அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டிய திறன்சார்ந்த தெளிவான பாடத்திட்டத்தை வரையறுக்கத் துவங்கின. இதற்கெனத் தனித்துறையும் பயிற்றுமுறை வடிவமைப்பு (instructional design / learning design) நிபுணர்களும் பணியிலமர்த்தப்பட்டனர்.
மின்வழிக்கற்றல் (eLearning) என்ற குடையின் கீழ் நேர்முகப் பயிற்சி (face-to-face training), பயிற்றுநர் வழிநடத்தும் கற்றல் (instructor-led training), இணையவழிக் கற்றல் (web-based training), கணினிவழிக் கற்றல் (computer-based learning), இணைப்புக் கற்றல் (blended learning), செயற்பாட்டு வழிக் கற்றல் (activity-based learning), விளையாட்டு வழிக் கற்றல் (game-based learning), பாவிப்பு (simulation) என்ற பல கற்றல் வழிமுறைகள் வரும். இவற்றுள் ஒன்றான இணையவழிக் கற்றல்தான் நம் எல்லோருக்கும் கடந்த ஓரிரு மாதங்களாக நன்றாகத் தெரிந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. சரி, இவற்றுள் எந்தக் கற்றல் முறை சிறந்தது? எல்லா முறைகளும் சிறந்தவைதான். கற்பிக்கவேண்டிய பாடம், கற்கும் மாணவர்களின் பின்னணி, பயன்பாடு, நிறுவனத்தின் நிதி ஒதுக்கீடு இவற்றைப் பொறுத்துத்தான் கற்றல் வழிமுறையைத் தெரிவு செய்வார்கள்.
தொழில்நுட்பத்திறன் அல்லது மென்திறன் வளர்க்கும் பயிற்சிகள் பயிற்றுநர் வழிநடத்தும் கற்றலாக நேர்முகமாகத்தான் நடைபெறும். குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் அல்லது மென்திறன் கோட்பாட்டில் சான்று பெற்றவர்தான் பயிற்றுநராக இருப்பார். பயிற்சியின் கால அளவு சில மணி நேரத்திலிருந்து நாட்கள் அல்லது வாரக்கணக்கில் கூட இருக்கும். முக்கியமான கோட்பாடுகளைக் கற்றுத்தருவதோடு செயல்முறைப் பயிற்சி, அன்றாடப் பணியில் எங்கே எப்படி எப்போது பயன்படுத்தவேண்டும் என்று நடைமுறையில் செயலாற்றுவது குறித்தும் சொல்லித்தரப்படும்.
நேர்முகப் பயிற்சியில் பயிற்றுநருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு நட்பிழை பின்னப்பட்டு பரஸ்பர நன்மதிப்பு தோன்றி கற்றுக்கொள்ளும் ஊக்கத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தும். ஆனால் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்றுகூட முடியாத இப்போதைய நெருக்கடி நிலையில் இந்தப் பயிற்சிகளை எப்படி நடத்துவது என்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நிறுவனங்களின் பாடம் மற்றும் பயிற்சித்திட்டம், பயிற்றுநர், மாணவர்கள் எல்லோரும் தயார். நேர்முகப் பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அப்படியே இணைய கருத்தரங்க செயலி வழியாக நடத்திவிடலாமே என்று சொல்லலாம், செய்தும் பார்க்கலாம். ஆனால் பயிற்சியை நடத்திமுடித்திவிட்டோமென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர மாணவர்கள் பயன்பெற்றார்களா என்பதை உறுதியுடன் சொல்லமுடியாது.
நேரில் ஒன்றைச் சொல்வதற்கும் செய்வதற்கும் இணையத்தின் வழியாக நடைமுறைப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் உடல்மொழியை வைத்தே சொல்வதைப் புரிந்துகொண்டார்களா இல்லையா என்பதைப் பயிற்றுநர் கண்டுபிடித்துவிடுவார். கவனம் கலைகிறது என்றால் உடனடியாக நகைச்சுவையாக எதையாவது சொல்லி மீண்டும் தன்னைக் கவனிக்கச் செய்வார். அயர்ச்சியாக இருப்பதுபோலத் தெரிந்தால் தேநீர் இடைவேளையை சில மணித்துளிகள் முன்னதாகவே அறிவிப்பார். இதெற்கெல்லாம் இணையவழி வகுப்பில் சாத்தியம் குறைவு. மாணவர்கள் நீங்கள் சொல்வதைக் கவனம் சிதறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அனுமானத்தில் தான் பாடம் நடத்த வேண்டிவரும்.
முதலாவதாகக் கருத்தில் கொள்ளவேண்டியது நிறுவனத்தின் கைவசமிருக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்பு. எந்த விதமான பயிற்சிக்கு எந்தச் செயலியைப் பயன்படுத்தினால் அதிக பயனைத் தரும் என்பதைக் கணிக்கவேண்டும். இப்போதிருக்கும் நிலைமையில் புதிய செயலிகளை வாங்குவதில் முதலீடு செய்யமுடியாது.
கூடவே எந்தெந்தப் பாடங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்த வேண்டும். எல்லாப் பாடங்களையும் ஒரே நேரத்தில் மாற்றியமைப்பது சாத்தியமில்லை, தேவையுமில்லை. நெருக்கடி நிலைமை இன்னும் சில மாதங்களில் மாறிவிடலாம். அதுவரை அந்தப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் அவசரமில்லை என்றால் அவற்றில் முதலீடு செய்யும் நிதியும் மனித உழைப்பு நேரமும் வீணாகிவிடும்.
கூடவே எல்லோரும் வீட்டிலிருந்து பணி செய்யும் இந்தக் காலகட்டத்தில் இணைய இணைப்பின் தரம் திடம் அலைவரிசை சரியாக இருக்கிறதா, பயிற்சி நேரத்தின்போது மின்தடையில்லாமல் இருக்கிறதா, சுற்றிலும் கவனத்தைச் சிதறவைக்கும் விஷயங்கள் நடக்காமல் இருக்கிறதா, குறிப்பாகப் பக்கத்து வீட்டுக்காரர் சுவற்றில் ஆணியடிக்காமலோ அடுக்ககத்தின் குழந்தைகள் கூச்சல்போட்டு விளையாடாமலோ இருக்கிறார்களா இப்படிப் பல விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.
அடுத்ததாகக் கருத்தில் கொள்ளவேண்டியது பயிற்றுமுறை வடிவமைப்பு சார்ந்த மாற்றங்கள். ஏற்கனவே சொன்னதுபோல நேர்முக வகுப்பில் வெற்றிபெற்ற செயல்முறைகள் எல்லாமே இணையவழிக் கற்றலில் அதேபோல எடுபடும் என்று சொல்லமுடியாது. எடுத்துக்காட்டாக, நேர்முக வகுப்புகளில் மாணவர்களை மூன்று நான்கு பேர் அடங்கிய சிறிய குழுக்களாகப் பிரித்து சில செயல்முறைகளைச் செய்யச் சொல்லுவார்கள். பின்னர் அதுகுறித்த அவர்களுடைய கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளச் சொல்வார்கள். இதைத் தொடர்ந்து கேள்வி நேரமும் பயிற்றுநரின் விளக்கமும் இடம்பெறும். ஒரு சில இணையவழிக் கருத்தரங்க செயலிகளில் இது போன்ற சிறு குழுக்களை உருவாக்கி செயல்படவைப்பது சாத்தியம்தான். என்றாலும் நேர்முகத்தில் முன்பின் தெரியாதவர்கள் இணைந்து செயலாற்றுவது போலப் பலன்தருமா என்பதும் கேள்வி தான்.
விளையாட்டுவழியாக முக்கியமான கோட்பாடுகளைக் கற்றுத்தருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, 'புதையல் வேட்டை' என்ற விளையாட்டு இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் ஒன்று. புதையலைத் தேடும் பூதங்கள் போல நிறுவனத்தின் தளம் முழுவதும் தேடியலைந்து குறிப்பிட்ட தகவல்களையும் பொருட்களையும் சேகரித்துக்கொண்டு வரவேண்டும். அலுவலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் புகுந்து சென்று முகமறியாத சக பணியாளர்களோடு பேச வேண்டிவரும். தனியாகவோ குழுவாகவோ எப்படி விளையாடினாலும் சுவாரசியமான விளையாட்டு இது. இணையத்துக்காக எப்படி மாற்றியமைப்பது?
சில வகுப்புகளில் வீடியோக்களைப் பார்த்தபின் அது குறித்த தங்கள் கருத்துக்களையும் எழும் கேள்விகளையும் தனித்தனியாகவோ குழுவாகக் கலந்தாலோசித்தோ வகுப்பிலிருக்கும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். கேள்வி-பதில் நேரம் அல்லது வினாடி-வினா போன்றவற்றில் முதலில் கையைத் தூக்கும் மாணவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுபோன்ற பயிற்றுமுறைகளின் வடிவமைப்பையே இணையவழிக் கற்றலுக்கு ஏற்றாற்போல மாற்றி வடிவமைக்க வேண்டியது அவசியம்.
முன்பு சொன்னதைப் போல யாருமில்லாத அறையில் கணினியின் முன் உட்கார்ந்து தொடர்ந்து ஒரு குரலையே கேட்டுக்கொண்டிருப்பது அயற்சியைத் தரும். மனம் வேறு களிப்பூட்டும் விஷயங்களை இணையத்தில் நாடலாம் அல்லது நம்மையறியாமல் சில நொடிகள் கண்ணை மூடிவிடலாம். இதற்காக அவ்வப்போது மாணவர்களின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைத்துக் கொள்ளவும் உற்சாகமூட்டவும் சில உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.
வகுப்பறையில் காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணி வரையிலும் பயிற்சி நடக்கும். இணையவழிக் கற்றலில் இத்தனை நேரம் செலவுசெய்ய யாராலும் முடியாது. எனவே பாடத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வயதுவந்தோருக்கான கற்றல் உத்திகளைப் பயன்படுத்தி மாற்றியமைக்கவேண்டும். இதனால் மாணவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் சலிப்பின்றிப் பாடங்களைக் கற்கமுடியும்.
இறுதியாகப், பாடத்தை முடித்ததும் மாணவர்கள் இணையவழித் தேர்வுகளை எடுத்துக்கொள்ளவர்கள். இவற்றைப் பெரும்பாலும் அதற்கென கட்டமைக்கப்பட்ட சிறப்புக் கணினியில் பயிற்றுநரின் முன்னிலையில் எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிசெய்யும் இந்த நேரத்தில் இதைச் செயல்படுத்தும் சாத்தியம் குறைவுதான். இதற்காகக் கற்றல் வழிமுறையோடு தேர்வுமுறையையும் மாற்றியமைக்க வேண்டும்.
ஆக, ஏற்கனவே கைவசமிருக்கும் பாடத்தை அப்படியே இணையத்தின் வழியாக நடத்துவதென்பது 'ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்' என்பதைப்போல அபத்தமான செயலாகும். நிறுவனங்கள் வடிவமைப்பை மாற்ற நிதி ஒதுக்கீட்டுடன் பயிற்றுமுறை வடிவமைப்பு மற்றும் இணையவழிக் கற்றலில் தேர்ந்த நிபுணர்களின் பங்களிப்பைப் பெறவேண்டியிருக்கிறது. கூடவே இதற்கு முன்னர் எந்தெந்த உத்திகள் வெற்றி அல்லது தோல்வி பெற்றிருக்கின்றன என்ற வரலாற்றுத் தரவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட்டால்தான் பயிற்றுநர் வழிநடத்தும் கற்றல் (instructor-led training) என்பது இணையவழி பயிற்றுநர் வழிநடத்தும் கற்றலாக (virtual instructor-led training) மாற்றம் பெறுவதோடில்லாமல் நிறுவனம் எதிர்பார்க்கும் திறன்மாற்றப் பலன்களை பணியாளர்களிடம் கொண்டுவந்து சிறந்த முதலீட்டின் மேல்வருவாயைப் பெற்றுத்தருமென்பதில் என்பதில் சந்தேகமில்லை.
#puthiya_thalaimurai
#புதிய_தலைமுறை_இணையதளம்