திங்கள், 26 அக்டோபர், 2020

பேரண்டித்தின் நியதிகளும் வாழ்க்கையின் நுணுக்கப்படிவமும்

 

இந்த மில்லென்னியத்தின் துவக்க ஆண்டான Y2K-யில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. காலையில் முகநூலில் தோன்றி பல நினைவலைகளை வீசச் செய்தது. 
 
Y2K என்று அழைக்கப்பட்ட புதிய மில்லென்னியத்தின் துவக்கத்தைக் குதூகலத்துடனும் களிப்புடனும் கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். புதுவருடப் பிறப்பைக் கொண்டாடும் கோலாகலத்துடன் புதிய ஆயிரமாவது ஆண்டின் பிறப்பைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்த தலைமுறை என்ற மகிழ்ச்சியும் சேர்ந்துகொண்டது. அதே நேரத்தில், உலகெங்கும் இருந்த மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய ஆயிரமாவது ஆண்டின் வருகை மிகப் பெரிய சிக்கல் ஒன்றையும் கொண்டுவரப் போகிறது என்று கணித்தன. அதற்கு 'Y2K சிக்கல்' என்று பெயரிட்டு அந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று கையைப் பிசைந்துகொண்டு இருந்தன. 
 
அதுவரை மென்பொறியாளர்கள் ஆண்டுகளைக் கணக்கிடும் நிரலை இரண்டு இலக்கங்களை மட்டுமே கொண்டு எழுதி இருந்ததால் 2000-ஆம் வருடத்தின் புத்தாண்டு பிறக்கும்போது கணினிகளின் காலக்கணக்கு பிறழும்; வங்கிகளும் நிதிநிறுவனங்களும் பல இழப்புகளைச் சந்திக்கும்; விமான நிறுவனங்களின் கணினிகளில் குளறுபடி ஏற்பட்டு பயணங்கள் தடைப்படும்; பாதுகாப்புச் சோதனைகளை நடைமுறைப்படுத்த கணினியைப் பயன்படுத்தும் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்; ஏவு கணைகள் தாறுமாறாகவும் தன்னிச்சையாகவும் செயல்படக்கூடும்; இதனால் உலகில் பேரழிவு ஏற்படும் என்றெல்லாம் கலக்கம் ஏற்பட்டது. கணினி மென்பொருள், வன்பொருள் இரண்டையும் பாதிக்கும் விஷயம் என்பதால் கணினி நிறுவனங்கள் இந்தச் சிக்கலை முறியடிப்பதில் கவனத்தைக் குவித்து இயங்கிக்கொண்டு இருந்தன. தீர்வைக் கண்டுபிடிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவுசெய்த அதே சமயத்தில் இத்தாலி, ரஷியா, தென்கொரியா போன்ற மற்ற நாடுகள் எதையுமே செய்யாமல் சும்மா இருந்தன. 
 
வயதும் அனுபவமும் கூடக்கூட நாம் வாழ்க்கையில் கற்கும் எல்லோருக்கும் பொதுவான பாடமான இந்தப் பேரண்டத்தின் நியதிகள்தான் இங்கே கைகொடுத்தன. முதலாவது, மிகப் பெரிய சிக்கல்களுக்கான தீர்வு மிக எளிமையானது. அடுத்தது, நாம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் என்று நினைக்கும் சிக்கல்கள் எல்லாம் காற்றுப்போன பலூன் போல ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். சொல்லப்போனால், புதிய துவக்கத்துக்கு முன்னால் ஏற்படும் கலக்கம் நம்மைத் தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டுவதோடு எந்த விதமான சிக்கலையும் எதிர்கொள்ளவும் தயார் செய்கிறது.
Y2K சிக்கலிலும் தேதிக்கான இலக்க இடங்களை இரண்டில் இருந்து நான்காக மாற்றிவிடும் எளிய வழியைத்தான் பல வல்லுனர்கள் பரிந்துரை செய்தனர். மேலும், 2000-ஆம் ஆண்டு பிறக்கையில் பலரும் பயப்பட்டதுபோல உலகெங்கும் தன்னிச்சையாக ஏவுகணைகள் கண்டம்விட்டுக் கண்டம் பாயவோ அணு உலைகள் வெடித்துச் சிதறவோ விமானங்கள் நடுவானில் இருந்து தரையில் இறங்க முடியாமல் தத்தளிக்கவோ இல்லை. பெரும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படாமல் மனித இனம் உயிர்பிழைத்தது. 
 
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோளாறுகள் ஏற்பட்டது உண்மைதான். ஜப்பானின் இஷிகாவில் இருந்த அணு மின் நிலையத்தில் இருந்த அணுக்கதிர் இயந்திரம் பழுதுபட்டது என்றாலும் பொதுமக்களுக்கு எந்த ஊறும் ஏற்படவில்லை. ரஷியாவில் ஏவுகணைகள் இயக்கப்பட்டன என்றாலும் அவை செச்சென்யாவுடன் ஏற்பட்டிருந்த உள்நாட்டுக் குழப்பத்தின் காரணமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டவைதான். இவை எதுவும் Y2K என்று அழைக்கப்பட்ட மென்பொருள் கோளாறால் நடக்கவில்லை. ஆக, Y2K சிக்கல் என்பது 'உலகம் அழியப்போகிறது' என்ற கோட்பாட்டைப் பறைசாற்றுபவர்களால் கிளப்பிவிடப்பட்ட புரளி என்ற முடிவுக்கு வந்தனர்.
 
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய அத்தியாயமொன்றின் மகிழ்ச்சியான துவக்கம், நெஞ்சைப் பிளக்கும் துயரம் இரண்டையும் கலந்தே கொண்டுவந்தது Y2K. வாழ்க்கையின் பிடிப்பு கைநழுவிப் போனது போன்ற உணர்வு மேலிட்ட பெருந்துயரக் காலமது. இன்று திரும்பிப் பார்க்கையில் தத்துவார்த்தமான பல விளக்கங்கள் தென்படுகின்றன. இவை எதுவும் புரியும் காலமாக அது இல்லை. என்றாலும் வாழ்க்கையின்மீது தீராத நம்பிக்கையும் பிடிப்பும் கொண்டு என் கடமைகளையும் நான் முன்னெடுத்த முயற்சிகளையும் இடைவிடாது செய்துகொண்டிருக்கும் எளிமையான வழியையே தேர்ந்தெடுத்தேன். அன்று வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நிகழ்வுதான் வரும் காலத்துக்கான உந்துசக்தியாகவும் உரமாகவும் இருந்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன். இந்தப் பேரண்டித்தின் (macrocosm) நியதிகளே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நுணுக்கப்படிவமாக (microcosm) இருக்கிறது என்பதைத்தானே இந்த இரண்டு நிகழ்வுகளும் நிறுவுகின்றன. 
 
எல்லாம் சரி, ஒரு நிழற்படத்தின் பின்னால்தான் எத்தனை எத்தனை சிந்தனைகள், வாழ்க்கைக் கதைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக