பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரத்தில் தொழில்நுட்பத் தேர்வொன்றை எழுதினேன். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும் குறிப்பிட்ட தேதிக்குள் எழுதிமுடித்தால் சில சலுகைகளை அறிவித்திருந்தது அலுவலகம். ஏற்கனவே குவிந்துகிடக்கும் வேலையில் தொழில்நுட்பப் பாடத்தைப் படிப்பது அயற்சியாகத் தோன்றியதால் இந்த விஷயத்தை முற்றிலும் மறந்துவிட்டேன். என்னுடைய குழுவில் இருக்கும் ஒரு பெண் இந்தத் தேர்வை எழுதிமுடித்தார் என்ற அறிவிப்பையும் பாராட்டையும் பார்த்தபோதுதான் நினைவுக்கு வந்தது. என்னுடைய பாராட்டையும் அவருக்குத் தெரிவித்துவிட்டு எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேட்டேன்.
நீங்களும் எழுதலாம், இன்றே பதிவுசெய்யுங்கள் என்று ஊக்குவித்ததோடு அதற்கான வழிமுறைகளையும் சுட்டிகளையும் பகிர்ந்துகொண்டார். அலுவலகம் தரும் சலுகையைப் பெறவேண்டுமென்றால் அடுத்த நாளே தேர்வெழுதி முடிக்கவேண்டும் என்பதையும் சொன்னார். இரண்டே நாளில் சாத்தியமா என்ற கேள்வியும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. இருந்தாலும் துணிந்து பதிவுசெய்தேன்.
"எங்களையெல்லாம் படி படின்னு சொல்றேயில்லை. நீ ஒழுங்காப் படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாரு." "என்ன படிக்காம சுத்தற." விஷயம் தெரிந்ததும் வீட்டில் ஒரே கேலி கிண்டல். நேரம்! தேர்வில் வெற்றிபெறுவது மானப் பிரச்சினையாகவும் ஆகிப்போனது. பாடங்களும் பயிற்சித் தேர்வுகளும் இணையத்தில் இலவசமாகக் கிடைத்தன. இரண்டு நாளும் அலுவலக, தனிப்பட்ட வேலைகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன்.
வீட்டிலிருந்து எழுதும் இணையவழித் தேர்வென்பதால் தேர்வை நடத்தும் பன்னாட்டு நிறுவனம் பல விதிமுறைகளை விதிக்கிறது. தேர்வுக் கண்காணிப்பாளர் கிடைக்கும் நாளிலும் நேரத்திலும்தான் தேர்வெழுதமுடியும். உங்கள் இணைய இணைப்பு, மடிக்கணினியின் மைக், காமிரா எல்லாம் சரியாக வேலைசெய்கிறதா எனச் சோதிக்கப்படும். நீங்கள் தேர்வெழுதப்போகும் அறையை முன்னரே முடிவுசெய்து அங்கிருந்துதான் இந்தச் சோதனைகளைச் செய்யவேண்டும். கூடவே அறையை நான்கு கோணங்களில் இருந்து படம்பிடித்துப் பதிவேற்றவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணமொன்றையும் கையில் வைத்திருக்கவேண்டும்.
இந்தத் தேர்வை எழுதுபவர்கள் அலுவலகத்தின் தகவல் பரிமாற்ற / அரட்டை தளத்தில் நாள்முழுவதும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபடியே இருப்பார்கள். பயனுள்ள பல நுணுக்கமான தகவல்கள் இருக்குமென்றாலும் என்னென்ன விதத்திலெல்லாம் இடையூறு ஏற்படலாம் என்பது பதட்டமேற்படுத்தும். கண்காணிப்பாளர்
கிடைக்காததால் சில சமயங்களில் தேர்வு நேரமும்
நாளும் ஒத்திவைக்கப்படும். கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாகத் தேர்வெழுதமுடியாமல்
போகலாம். தேர்வெழுதும்போது கண்காணிப்பாளர் மடிக்கணினியின் காமிரா மூலமாக உங்களைக் கவனித்துக்கொண்டிருப்பார்.
நீங்கள் தேவைக்கு அதிகமாக அசைவதுபோலவோ யாரிடம் இருந்தாவது உதவிபெறுவதுபோலவோ தெரிந்தாலும்
இரைச்சலும் சத்தமும் அளவுக்கதிகமாக இருந்தாலும் தேர்வு உடனடியாக நிறுத்தப்படும். இன்னும்
எத்தனை எத்தனையோ.
எனக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுநேரம் இரவு பதினொன்றரை மணி. நாள்முழுவதும் படித்துக்கொண்டும் அலுவலக வேலை, கூட்டம் என பரபரப்பாகவும் இருந்ததால் குட்டித்தூக்கம் ஒன்றைப் போட்டு எழுந்தேன். கணினி, அலைபேசி இவற்றின் வழியாகத் தேர்வுக்கான சில தொழில்நுட்ப முன்னேற்பாடுகளைச் செய்துமுடித்ததும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுக் கண்காணிப்பாளர் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். என் மேசைக்கு அருகில் அலமாரியில் இருந்த புத்தகங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அவையெல்லாம் தமிழ்ப் புத்தகங்கள் என்று விளக்கமளித்தபடியே அறையின் மூலையில் அடுக்கிவைத்தேன். மீண்டும் ஒருமுறை என் மேசையைக் காட்டச் சொல்லிவிட்டுத் தேர்வைத் துவக்கிவைத்தார்.
ஒரு மணிநேரத் தேர்வுதான் என்றாலும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. சில கேள்விகளுக்கான பதிலை மூளையைக் கசக்கிப் பிழிந்து நினைவுக்குள் கொண்டுவர முயன்றேன். ஊம்ஹூம்! பல சொற்றொடர்கள் ஒரேமாதிரி இருந்ததால் எது சரியான விடை என்பதில் குழப்பம் ஏற்பட்டது. சில கேள்விகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்ததும் அவற்றில் இருந்த முடிச்சு புலப்பட்டது, விடையும் தெரிந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகும் பெருமூச்சுவிட்டபடியே மீண்டும் ஒருமுறை சரிபார்த்தேன்.
ஒரு வழியாகத் தேர்வை எழுதி முடிக்கும்போது மணி பன்னிரெண்டே முக்கால். நம்மூர்த் தேர்தல்போல இல்லாமல் முடிவு உடனே கணினியின் திரையில் ஒளிர்ந்தது. வெற்றிபெறத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன்.
"ஆத்தா, நான் பாஸாயிட்டேன்," என்று உற்சாகமாகக் கத்திக் குதிக்கவேண்டும்போல இருந்தது. நள்ளிரவென்பதால் சத்தமில்லாமல் குடும்பத்தினரிடம் விவரத்தைச் சொல்லிவிட்டுப் படுக்கையில் விழுந்தேன்.
புகைப்படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக