ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

என்னுடன் எப்படி நட்பானீர்கள்


 

வாழ்க்கையின் ஒரு கட்டம்வரை நெருங்கிய நட்புகளைச் சந்தித்த நாளை மறக்காமல் அசைபோடுவது வழக்கம். அவர்களிடமே அதைப் பகிரும்போது வாயைப் பிளப்பார்கள். கல்லூரியில் படிக்கும்போது வேறு துறை, கல்லூரி என்று மிகப் பெரிய நட்புவட்டம். எந்த நாளில் எப்போது எப்படிச் சந்தித்தோம் என்ன பேசினோம் என்பதோடு என்ன உடை, அணிகலன்கள் அணிந்திருந்தோம் கூட யார் இருந்தார்கள் என்பதுவரை சித்திரம் தீட்டுவதுபோல நினைவுகூரும்போது ஒவ்வொருவரும் சந்தோஷப்படுவதும் ஆச்சரியப்படுவதும் சின்னதாக ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். 
 
மனதுக்குப் பிரியமானவர்களோடு மணிக்கணக்காக அளவளாவிய கதைகளை அசைபோட்டு ரசித்து அந்தக் காலத்தை மீட்டுவந்து இருத்திக்கொள்ளும் முயற்சி பல நாள் தொடர்வதும் வாடிக்கை. இப்படிச் சில நினைவுகள் குட்டிக்கரணம் போட்டு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் குதூகலத்தையும் தந்தாலும் சில நினைவுகள் காயத்தின் வலியை மீண்டும் உணரச்செய்து வேதனையைத் தருவதோடு கண்ணாம்பாள், சௌகார் ஜானகிபோலக் கண்ணீரால் குளிப்பாட்டும் என்பது தனிக்கதை. 
 
ஆறு இலக்கத் தொலைபேசி இருந்தவரை, ஏன், அது எட்டு இலக்கமானதுவரைகூட, எண்களை மனனம் செய்வது சாத்தியமானது. தெருவோர ஃபோன் பூத்துக்குத் தொலைபேசி எண்ணை எழுதியெல்லாம் எடுத்துக்கொண்டு போனதில்லை, STD எண்கூடத்தான். அதுபோலவே நெருங்கியவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நாட்கள் அனைத்தும் நினைவில் இருக்கும். கடிதம் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்ததுவரை முகவரி, பின்கோடு எல்லாமே மனப்பாடம். 
 
வீட்டின் எந்த அலமாரியில் எந்தப் பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைச் சொல்வதும் கைவந்தது. யார் எப்போது எந்தத் தகவலைச் சொன்னார்கள் என்பதும் டைரிக் குறிப்புபோல நினைவில் இருக்கும். அம்புலிமாமா நூலகத்தில் அத்தனை புத்தகங்களும் இருக்கும் இடம் மனப்பாடம். அவற்றின் உள்ளடக்கமும் சேர்த்துத்தான். நூலக அறிவியல் படித்த புதிய நூலகர் ஒவ்வொன்றுக்கும் குறியீட்டெண் வழங்கி வரிசையாக அடுக்கிவைத்து கணினியில் ஏற்றும் காலம்வரை குறிப்பிட்ட தலைப்பில் புத்தகம் இருக்கிறதா என்று யாராவது கேட்டால் என்னைக் கூப்பிட்டனுப்புவது வழக்கம். "You have an elephantine memory" என்ற பாராட்டு இன்னும் பலவற்றை நினைவில் வைத்துக்கொள்ள உந்துதலாக இருந்தது.
 
முதலில் உடன்பணிபுரிவோர், பள்ளி கல்லூரிக்கால நட்பு, தூரமாக வசிக்கும் உறவுகள் என்று நேரில் அறிமுகமானவர்களோடு தொடங்கிய முகநூல் நட்பில் இன்று முன்பின் அறியாதவர்கள்கூட நட்புப் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் ஒரு சில பேரை மட்டுமே நேரில் சந்திக்கவும் ஃபோனில் பேசிப் பழகவும் வாய்ப்பு அமைகிறது. சிலரை நேரில் சந்தித்தாலும் பேசியது என்னவோ வெறும் நான்கு சொற்களாகத்தான் இருக்கும். "வணக்கம். மகிழ்ச்சி. மீண்டும் சந்திக்கலாம்." 
 
மற்றபடி தினமும் எகிறும் சென்னையின் வெப்பநிலையைப்போல 1000, 1100, 1500, 1600 என்று வளரும் நட்புப்பட்டியலில் பலபேரின் பதிவுகள்கூட நம் டைம்லைனில் வருவதில்லை. கூடவே கொஞ்சம்கொஞ்சமாகத் தேவையானவற்றை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்வது என்ற பயிற்சியில் இந்த elephantine memory பெருமையெல்லாம் கூட்டித் தள்ளியாகிவிட்டது. 
 
இதுல நான் உங்கள "என்னுடன் எப்படி நட்பானீர்கள்னு" கேட்டு பதிலுக்கு நீங்களும் கேட்டா முகத்தை எங்க கொண்டுபோய் வெச்சுக்குவேன் சொல்லுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக