ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

தேர்தல் ஜுரம்

 

ஏனோ எந்தத் தேர்தலுக்கும் இல்லாத பரபரப்பு இந்த முறை தொற்றிக்கொண்டது. வீட்டில் மகள்களுடன் எப்போதும்போல அரசியல் பேச்சு, அளவளாவல், அலசல் எல்லாம் இருந்தாலும் அவர்கள் வயதொத்தவர்களின் கருத்துகள் அயர்ச்சி தருவதாக இருந்தது. 
 
- வீட்டில் தொலைக்காட்சி இல்லையென்றாலும் முகநூலும் இணையமும் அதைவிடவும் பரபரப்பாகத் தகவல்களைத் தந்தபடி இருந்ததால், இல்லாத BP-யை வரவைத்துவிடுமோ என்று கொஞ்சம் விலகியிருந்தேன்.
 
- சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலின்போது மதியம்தான் போகமுடிந்தது. கொளுத்தும் வெயிலில் நின்று மயக்கமே வந்துவிட்டது. அதனால், இந்த முறை காலை ஏழரை மணிக்கே கிளம்பியாயிற்று. 
 
- சாலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் ஓட்டுப்போட ஊருக்குப் போகிறார்களா அல்லது இன்றும் பணிக்குச் செல்லவேண்டிய கட்டாயமா என்று தெரியவில்லை. எல்லா அலுவலகங்களும் தேர்தலுக்கு விடுமுறை அறிவிக்கவேண்டுமே என்று நினைத்துக்கொண்டேன்.
 
- ஓட்டுச் சாவடிக்கு நூறு மீட்டர் தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஓட்டுச் சாவடியை நோக்கி நடக்கும்போது எதிர்ப்பட்ட தெரிந்த முகங்களுக்கு முகக் கவசம் அணிந்திருந்ததால் என்னை அடையாளம் தெரியவில்லை. 
 
- கொஞ்சம் பரபரப்பாக எதிரே வந்த தம்பதியர் ஓட்டுப்போட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நான் வரிசையில் நிற்கும்போது ஓட்டுச் சாவடியில் அவர்களின் பூத்தைத் தேடிக்கொண்டு இருந்தனர். வாக்காளர் அட்டை, பூத் ஸ்லிப் இரண்டில் எதைக் கொண்டுவரப் போனார்கள் என்பது தெரியவில்லை. 
 
- வாயிலில் நின்ற காவல்துறையினரிடம் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த மாநகராட்சி ஊழியரிடம் என் வார்டுக்கான பூத்தைத் தெரிந்துகொண்டேன். 
 
- பூத் நுழைவுவாயிலில் கதவு எண்போல வார்டு எண் தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும் கவனத்தை ஈர்க்கவில்லை. குழப்பத்துடன் அலைந்தவர்களிடம் மாநகராட்சி ஊழியரிடம் கேளுங்கள் என்று கைகாட்டினாலும் வரிசையில் நிற்பவர்களிடம் கேட்பதையே விரும்பினர். 
 
- அதற்குள் வரிசையில் நின்ற சில பேர் பூத் ஸ்லிப் வாங்குவதற்காக வரிசையைவிட்டு நகர்ந்தார்கள். வழக்கமாக வீட்டுக்கே வந்து பூத் ஸ்லிப் தருவார்கள். இந்த முறை https://electoralsearch.in/ இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்திருந்தாலும் சின்னக் குழப்பம். நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் இதுகுறித்த அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. 
 
- பூத் ஸ்லிப் வாங்குவதற்காக வாக்குச் சாவடியில் இருந்து 500 மீட்டர் தூரம்வரை நடக்கவேண்டியிருந்தது. திரும்பிவருவதற்குள் சில பூத்களில் வரிசை நீண்டிருந்தது. ஆதார் அட்டையும் கேட்கிறார்கள் என்று சன்னமான குரலில் சொன்னார் எனக்கு முன்னால் நின்ற பெண். போனில் இருந்ததைத் தேடி எடுத்துவைத்தேன். 
 
- பெண்கள் வரிசை மெதுவாகவே நகர்ந்தது. வயதான பெண் ஒருவர் முன்னே செல்ல வழிவிட்டோம். பூத்தை நெருங்கும்போது ஐந்தைந்து பேராக சானிடைசரும் வலது கைக்குமட்டும் பாலிதீன் கையுறையும் வழங்கப்பட்டது. பக்கத்து பூத் வரிசையில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் இங்கே வந்து கையுறை வாங்கிக்கொண்டு இன்னும் இரண்டு வேண்டும் எனக் கேட்கவும் தரமுடியாதென்று மறுத்தார் சுகாதாரப் பணியாளர். 
 
- அதற்குள் உள்ளே ஏதோ சின்னக் குழப்பம், பேச்சுக் குரல்கள். பூத் வாயிலில் இருந்த காவல்காரர் 'என்ன இவ்வளவு நேரமாகிறது, என்ன நடக்குது' என்று சலித்துக்கொண்டார். அப்போது காலை மணி எட்டேகால். 
 
- கையில் நோட்டும் பேனாவும் எடுத்துக்கொண்டு எத்தனை ஓட்டுப் பதிவாகியிருக்கிறது என்று கேட்க வந்தார் ஒரு பெண். முதல் ஒரு மணி நேரத்தில் ஐம்பது ஓட்டுக்கள் என்பதைக் குறித்துக்கொண்டார். வழக்கத்தைவிட கூடுதலா குறைச்சலா என்று தெரியவில்லை. நேரம் செல்லச்செல்ல நிறையபேர் வருவார்களோ.
 
- பூத்தினுள் மின்விசிறி அதிவேகமாகச் சுழன்றது. பின்மதியம் அடிக்கப்போகும் வெயிலுக்கு இது போதுமா என்று தோன்றியது. கொஞ்சம் மரங்கள் நிறைந்திருந்த பள்ளி வளாகம் என்பதால் வெயில் அவ்வளவு கடுமையாகத் தெரியாதோ என்று தேற்றிக்கொண்டேன். 
 
- வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட பெரியவர் என் கையில் வைத்திருந்த சானிடைசர் குப்பியைப் பார்த்ததும் 'கொஞ்சம் கொடுங்களேன்' என்றார். 'உள்ளே தருகிறார்கள்' என்றேன். 'இல்லை, எதுக்கும் கொஞ்சம் போட்டுக்கிறேன்' என்றவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொடுத்தேன். 'உள்ளே கூட்டமா' என்று கேட்டபடியே என் பதிலுக்குக் காத்திராமல் நடந்தார்.
 
- வரும்வழியில் சூப்பர் மார்க்கெட் காய்கறிக் கடை எல்லாம் திறந்திருந்தது. உள்ளே சென்று பொருட்களை வாங்கியபடியே 'ஓட்டுப் போட்டாச்சா' என்று விற்பனைப் பகுதியில் இருந்த இளம்பெண்ணைக் கேட்டேன். 'லீவு இல்லை' என்றார். இன்னொருவருக்கு ஓட்டுரிமை ஊரில் இருக்கிறதாம்.
இப்படி எத்தனை ஓட்டுக்கள் பதிவாகாமல் விட்டுப்போகிறதோ என்று யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக