புதன், 21 ஏப்ரல், 2021

விமானப் பயணங்களின் முடிசூடா ராணி - அமெலியா இயர்ஹார்ட்

 

அமெலியா இயர்ஹார்ட் - ஐரோப்பா அமெரிக்காக் கண்டங்களைப் பிரிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண் விமானி என்ற சாதனை படைத்தவர்.

தொழில்நுட்பமும் விமானங்களும் பெருமளவில் முன்னேற்றத்தை அடைந்திருக்கும் இன்றைய நாளில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கப் பயணிகள் விமானத்துக்கு எட்டு மணி நேரமாகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றுபோல அதிநுட்ப திசைகாட்டும் கருவிகளோ ஆற்றல்வாய்ந்த விசைப்பொறிகளோ இல்லாத காலத்தில் 20 மணி நேரம் ஆனது. கூடவே மிகவும் அபாயகரமான அந்தப் பயணத்தைத் துணிச்சல்மிக்கவர்கள் மட்டுமே மேற்கொண்டனர்.  அப்படிப்பட்ட மனவுறுதிகொண்டவராக இருந்த அமெலியா இன்றளவும் வீராங்கனையாகவும் பெண்களின் மனத்துக்குப் பிரியமான சாதனையாளவராகவும் இருந்துவருகிறார்.

அமெலியா இயர்ஹார்ட் 1897-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தின் அட்சிசன் நகரில் சாமுவேல் இயர்ஹார்ட், அமெலியா இணையருக்கு மகளாகப் பிறந்தார். அமெலியாவின் தாய் ஏமி முற்போக்கு எண்ணமுள்ளவர். தன்னிரு மகள்களையும் அடக்குமுறைக்கும் பழமைவாதத்துக்கும் ஆளாக்காமல் வளர்த்தார். வீட்டருகே இருக்கும் மரங்களில் ஏறி இறங்குவது, எலிகளை ரைஃபிளால் சுடுவது, பனிச்சறுக்கு வண்டியில் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்துக்கொண்டு சறுக்குவது எனத் திறந்தவெளியில் பொழுதைக் கழிப்பார்கள் அமெலியாவும் அவர் தங்கை கிரேசும்.

சிறுவயது முதலே எதையும் முன்னெடுத்துச் செய்யும் தலைமைப் பண்புமிக்கவராக இருந்தார் அமெலியா. ஏழு வயதில் ரோலர் கோஸ்டர் ஒன்றைப் பார்த்ததும் மரப்பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் கொண்டு மாமாவின் உதவியுடன் தானே ஒரு ரோலர் கோஸ்டரைச் செய்தார். அதில் உட்கார்ந்துகொண்டு கீழே சறுக்க முயன்றபோது கைகால்களில் சிராய்த்துக்கொண்டதும் ஆடையைக் கிழித்துக்கொண்டதும்தான் மிச்சம். ஆனால் முகத்தில் சிரிப்புடன் தூசியைத் தட்டியபடி எழுந்துவந்த குட்டி அமெலியா, "வானத்தில் பறப்பதுபோல இருந்துச்சு," என்று தங்கையிடம் உற்சாகத்துடன் கூறினார்.

பத்து வயதில் அயோவா மாகாணக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த விமானத்தில் பறக்கலாமா என்று தந்தை கேட்டபோது அமெலியாவுக்குப் பெரிதாக நாட்டமில்லை. லொடலொடவென்று ஆடிய அந்தப் பழைய விமானத்தைப் பார்த்துப் பயம்தான் ஏற்பட்டது. 1919-ஆம் ஆண்டில் டொரண்டோ நகரில் நடைபெற்ற கனடிய தேசியப் பொருட்காட்சியின் விமானக் கண்காட்சிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு விமானி, திடலின் ஓரத்தில் நின்றிருந்த அமெலியாவையும் அவர் தோழியையும் அச்சுறுத்துவதுபோல அவர்களுக்கு மிக அருகில் தன் விமானத்தை ஓட்டிச் சென்றார். "அந்த நேரத்தில் எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னருகே உரசியபடி சென்ற அந்தக் குட்டிச் சிவப்பு நிற விமானம் என்னிடம் ஏதோ சொல்ல விரும்பியது என நினைக்கிறேன்," என்று பின்னொரு நாளில் அந்தச் சம்பவம் குறித்து நினைவுகூர்ந்தார் அமெலியா.  

இப்படியாக 22 வயது வரையிலும் விமானத்துடன் முரண்பாடான உறவைக் கொண்டிருந்த அமெலியாவின் வாழ்வு விமானத்துடன் பின்னிப்பிணைந்தது 1920-ஆம் ஆண்டில்தான். லாங் பீச்சில் இருந்த வான்வெளிக் களத்துக்கு தந்தையுடன் போயிருந்தபோது ஃபிரேங்க் ஹாக்ஸ் என்ற புகழ்பெற்ற விமானியுடன் பயணம் செய்தார் அமெலியா. விமானம் சில நூறு அடிகள் மேலே எழுந்ததுமே பறப்பதுதான் தனக்கான வாழ்க்கை என்று முடிவுசெய்துவிட்டார்.

அடுத்த ஆண்டு முழுவதும் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான கட்டணத்தைச் சேமிப்பதற்காக வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டார். பயிற்சி முடிந்த சில மாதங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு 'கேனரி' என்று பெயர்சூட்டினார். 1922-ஆம் ஆண்டில் 14,000 அடி உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்ற முதல் பெண் விமானி என்ற சாதனையைப் படைத்தார். அடுத்த ஒரே வருடத்தில் விமானம் ஓட்டும் உரிமத்தைப் பெற்று உலகின் 16-வது பெண் விமானியானார்.

1927-ஆம் ஆண்டில் சார்ல்ஸ் லின்பெர்க் என்ற விமானி அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியொருவராக விமானம் மூலம் கடக்கும் சாதனையைப் படைத்தார். அடுத்ததாக, 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதே சாதனையைப் படைக்கும் வாய்ப்பு அமெலியாவைத் தேடி வந்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பயணத்தில் வேறு இரண்டு விமானிகளுடன் ஒரு பயணியாகத்தான் உடன்சென்றார் அமெலியா. இருந்தாலும் அது அருஞ்செயலாகவும் சாதனையாகவும் கருதப்பட்டது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெரும்சாதனையாளராகக் கொண்டாடப்பட்டார். "ஸ்டுல்ஸ்தான் எல்லாவற்றையும் செய்தார். நான் ஒரு உருளைக்கிழங்கு மூட்டையைப்போல பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு நாள் இதைத் தனியாகச் செய்துபார்க்கவேண்டும்," என்றார் அமெலியா.

அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வட அமெரிக்காக் கண்டம் முழுவதையும் மேலும்கீழுமாகக் கடந்த முதல் பெண் விமானி என்ற சாதனையைப் படைத்தார்.  "விமானத்தின் விசைக்கோலை மென்மையாகக் கையாளத் தெரிந்த ஒரு பிறவி விமானி," என்று தொழில்முறை விமானிகள் பலரும் அமெலியாவின் திறனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தேசிய வானூர்தியியல் சங்கத்தில் அலுவலராகப் பதவியேற்றபோது பெண்களிடையே விமானம் ஓட்டும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அவர்கள் புதிய சாதனைகளைப் படைக்கத் தேவையான ஊக்கத்தையும் உதவியையும் அளித்தார்.

முன்பே மனதில் உறுதி பூண்டிருந்தது போலவே 1932-ஆம் ஆண்டு மே மாதத்தில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் தனி விமானப் பயணத்தை மேற்கொண்டார் அமெலியா. கனடாவில் இருந்து கிளம்பி எங்குமே தரையிறங்காமல் விமானத்தை ஓட்டிச்சென்று ஏறக்குறைய 15 மணி நேரத்தில் அயர்லாந்தில் தரையிறங்கினார். அந்தச் சாதனைக்காக பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் உயரிடத்தைச் சேர்ந்தவர்களின் நட்பையும் பெற்றார். அடுத்தடுத்து வெவ்வேறு அண்டை நாடுகளின் நகரங்களுக்கிடையே தனியாகவும் தரையிறங்காமலும் விமானமோட்டி புதிய சாதனைகளைப் படைத்தார். நீண்ட பயணங்களின்போது உறங்கிவிடாமல் இருக்க மற்ற விமானிகளைப்போலத் தேநீரோ காபியோ அருந்தும் பழக்கம் இல்லாதவர் அமெலியா. வேறு என்ன செய்வார் தெரியுமா? மயக்கம் வராமல் இருக்கப் பயன்படுத்தப்படும் உப்பை அவ்வப்போது முகர்ந்துகொள்வார்.

பதவிகளும் சொகுசான வாழ்க்கையும் வசதியும் தேடி வந்தாலும் விமானத்தில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற மாபெரும் வேட்கையைக் கொண்டவராக இருந்தார் அமெலியா. அவருக்கு முன் வேறு பலர் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும் தனக்கென புதிய இலக்கொன்றை வைத்திருந்தார். தன் பயணத்துக்காகப் பூமத்திய ரேகையை ஒட்டி அமைத்துக்கொண்ட பாதை அதுவரை மற்றவர்கள் தேர்ந்தெடுத்த பாதையைவிட அதிக தூரத்தைக் கொண்டது. ஏறக்குறைய 47,000 கிலோமீட்டர் வான்வழிப் பயணம் செய்யவேண்டும். பர்டியூ பல்கலைக்கழகத்தின் பொருளுதவியுடன் அவருடைய பயன்பாடுக்கேற்ற வகையில் விமானத்தை வடிவமைத்தது லாக்ஹீட் வானூர்தி நிறுவனம்.

1937-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி மயாமி நகரிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணத்தைத் துவக்கினார்கள் அமெலியாவும் சக விமானி ஃபிரெட் நூனனும். அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு இடங்களில் எரிபொருளுக்காகத் தரையிறங்கினார்கள். ஜூன் 29-ஆம் தேதியன்று தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நியூ கினீ தீவை அடைந்தபோது 35,000 கிலோமீட்டர் பயணம் செய்திருந்தனர். அங்கிருந்து ஜூலை இரண்டாம் தேதி கிளம்பி சுமார் 4,200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஹௌலாண்ட் தீவை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அமெரிக்கக் கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்கள் கடலில் நிறுத்தப்பட்டிருந்தன.

பயணத்தின்போது ரேடியோக் கருவி மூலம் கப்பல்களோடு தொடர்பில் இருந்த விமானம் திடீரென நடுவானில் மறைந்துபோனது. கிட்டத்தட்ட 12 நாட்கள் நடைபெற்ற தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை. அமெலியாவும் ஃபிரெட்டும் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. அவர்களின் திடீர் மறைவு குறித்துப் பலவிதமான ஊகங்கள் இன்றுவரை உலவினாலும் என்ன நடந்தது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. தொலைந்துபோன நாளிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பிறகு அமெலியா இயர்ஹார்ட் மறைந்துவிட்டார் என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது.

விமானம் ஓட்டுவதில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் என்றாலும் அமெலியாவின் விடாமுயற்சியும் பெண்களால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் ஆண்களுக்குச் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்ற உறுதிப்பாடும் இன்றும் பல பெண்களை வழிநடத்துகிறது என்றால் மிகையில்லை. 

-கார்குழலி   

 

 

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

உலக மகளிர் தினம் 2021 - எதிர்ப்பு தெரிவிப்பதைத் தெரிவுசெய்

 

இன்று உலக மகளிர் தினம். இந்த வருடத்தின் கருப்பொருள் #Choose_to_Challenge, 'எதிர்ப்பு தெரிவிப்பதைத் தெரிவுசெய்' என்று பொருள். 

 
நமக்கு எளிதாகக் கிடைக்கும் பல விஷயங்கள் உலங்கெங்கும் உள்ள மற்ற பெண்களுக்கு அப்படியே வாய்ப்பதில்லை என்பதை நினைவில்கொள்வோம்.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் உலகமே திரும்பிப்பார்த்து வியந்த, கொண்டாடிய பெண் கவி அமண்டா கோர்மனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிந்திருக்கும் செய்தியைப் பார்த்தாலே தெரியும். 
 
"நான் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது என்னை ஒரு பாதுகாவலர் பின்தொடர்ந்தார். "உன்னைப் பார்த்தால் சந்தேகத்துக்குரியவளைப்போல இருக்கிறாய். நீ இங்குதான் வசிக்கிறாயா?" என்று கேட்டார். என் வீட்டின் சாவியைக் காண்பித்துவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தன் தவறுக்கு மன்னிப்பேதும் கேட்காமல் அங்கிருந்து சென்றார் அந்தப் பாதுகாவலர். கறுப்புப் பெண்களின் உண்மையான வாழ்க்கை இதுதான். ஒரு நாள் உங்களைப் புனிதத்தின் வடிவமாகக் கொண்டாடுவார்கள், அடுத்த நாளே நீங்கள் அச்சுறுத்தலாக மாறிவிடுவீர்கள்.
 
ஆம், ஒருவகையில் அந்தப் பாதுகாவலர் சொன்னது சரிதான். நான் ஒரு அச்சுறுத்தல்தான்: அநீதிக்கும், சமத்துவமின்மைக்கும், அறியாமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பவள். உண்மையைப் பேசும் நம்பிக்கையோடு இருக்கும் எவருமே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள்தான். அப்படி இருப்பதில் பெருமைகொள்கிறேன்."
நம்மைச் சுற்றியிருக்கும் நம் போன்ற பெண்களையே பார்த்துப் பழகிய கண்களுக்கு விளிம்புநிலையில் இருக்கும் பெண்களும் மனிதர்களும் பெரும்பாலும் தெரிவதில்லை. எல்லோரும் ஏதோ ஒருவகையில் சிரமப்படுகிறோம் என்றாலும் சில நேரங்களில் பெண்களாக இருப்பதாலேயே அது இரட்டிப்புச் சிரமமாகிவிடுகிறது. 
 
வாருங்கள், இந்த உலக மகளிர் தினத்தில் உறுதிகொள்வோம். சமத்துவமின்மையையும் பாலினப் பாகுபாட்டையும் எதிர்ப்போம். பெண்களின் சாதனைகளை, அது எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும், கொண்டாடுவோம். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்கொண்ட உலகை உருவாக்குவோம்.
 

என்னுடன் எப்படி நட்பானீர்கள்


 

வாழ்க்கையின் ஒரு கட்டம்வரை நெருங்கிய நட்புகளைச் சந்தித்த நாளை மறக்காமல் அசைபோடுவது வழக்கம். அவர்களிடமே அதைப் பகிரும்போது வாயைப் பிளப்பார்கள். கல்லூரியில் படிக்கும்போது வேறு துறை, கல்லூரி என்று மிகப் பெரிய நட்புவட்டம். எந்த நாளில் எப்போது எப்படிச் சந்தித்தோம் என்ன பேசினோம் என்பதோடு என்ன உடை, அணிகலன்கள் அணிந்திருந்தோம் கூட யார் இருந்தார்கள் என்பதுவரை சித்திரம் தீட்டுவதுபோல நினைவுகூரும்போது ஒவ்வொருவரும் சந்தோஷப்படுவதும் ஆச்சரியப்படுவதும் சின்னதாக ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். 
 
மனதுக்குப் பிரியமானவர்களோடு மணிக்கணக்காக அளவளாவிய கதைகளை அசைபோட்டு ரசித்து அந்தக் காலத்தை மீட்டுவந்து இருத்திக்கொள்ளும் முயற்சி பல நாள் தொடர்வதும் வாடிக்கை. இப்படிச் சில நினைவுகள் குட்டிக்கரணம் போட்டு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் குதூகலத்தையும் தந்தாலும் சில நினைவுகள் காயத்தின் வலியை மீண்டும் உணரச்செய்து வேதனையைத் தருவதோடு கண்ணாம்பாள், சௌகார் ஜானகிபோலக் கண்ணீரால் குளிப்பாட்டும் என்பது தனிக்கதை. 
 
ஆறு இலக்கத் தொலைபேசி இருந்தவரை, ஏன், அது எட்டு இலக்கமானதுவரைகூட, எண்களை மனனம் செய்வது சாத்தியமானது. தெருவோர ஃபோன் பூத்துக்குத் தொலைபேசி எண்ணை எழுதியெல்லாம் எடுத்துக்கொண்டு போனதில்லை, STD எண்கூடத்தான். அதுபோலவே நெருங்கியவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நாட்கள் அனைத்தும் நினைவில் இருக்கும். கடிதம் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்ததுவரை முகவரி, பின்கோடு எல்லாமே மனப்பாடம். 
 
வீட்டின் எந்த அலமாரியில் எந்தப் பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைச் சொல்வதும் கைவந்தது. யார் எப்போது எந்தத் தகவலைச் சொன்னார்கள் என்பதும் டைரிக் குறிப்புபோல நினைவில் இருக்கும். அம்புலிமாமா நூலகத்தில் அத்தனை புத்தகங்களும் இருக்கும் இடம் மனப்பாடம். அவற்றின் உள்ளடக்கமும் சேர்த்துத்தான். நூலக அறிவியல் படித்த புதிய நூலகர் ஒவ்வொன்றுக்கும் குறியீட்டெண் வழங்கி வரிசையாக அடுக்கிவைத்து கணினியில் ஏற்றும் காலம்வரை குறிப்பிட்ட தலைப்பில் புத்தகம் இருக்கிறதா என்று யாராவது கேட்டால் என்னைக் கூப்பிட்டனுப்புவது வழக்கம். "You have an elephantine memory" என்ற பாராட்டு இன்னும் பலவற்றை நினைவில் வைத்துக்கொள்ள உந்துதலாக இருந்தது.
 
முதலில் உடன்பணிபுரிவோர், பள்ளி கல்லூரிக்கால நட்பு, தூரமாக வசிக்கும் உறவுகள் என்று நேரில் அறிமுகமானவர்களோடு தொடங்கிய முகநூல் நட்பில் இன்று முன்பின் அறியாதவர்கள்கூட நட்புப் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் ஒரு சில பேரை மட்டுமே நேரில் சந்திக்கவும் ஃபோனில் பேசிப் பழகவும் வாய்ப்பு அமைகிறது. சிலரை நேரில் சந்தித்தாலும் பேசியது என்னவோ வெறும் நான்கு சொற்களாகத்தான் இருக்கும். "வணக்கம். மகிழ்ச்சி. மீண்டும் சந்திக்கலாம்." 
 
மற்றபடி தினமும் எகிறும் சென்னையின் வெப்பநிலையைப்போல 1000, 1100, 1500, 1600 என்று வளரும் நட்புப்பட்டியலில் பலபேரின் பதிவுகள்கூட நம் டைம்லைனில் வருவதில்லை. கூடவே கொஞ்சம்கொஞ்சமாகத் தேவையானவற்றை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்வது என்ற பயிற்சியில் இந்த elephantine memory பெருமையெல்லாம் கூட்டித் தள்ளியாகிவிட்டது. 
 
இதுல நான் உங்கள "என்னுடன் எப்படி நட்பானீர்கள்னு" கேட்டு பதிலுக்கு நீங்களும் கேட்டா முகத்தை எங்க கொண்டுபோய் வெச்சுக்குவேன் சொல்லுங்க.

தேர்தல் ஜுரம்

 

ஏனோ எந்தத் தேர்தலுக்கும் இல்லாத பரபரப்பு இந்த முறை தொற்றிக்கொண்டது. வீட்டில் மகள்களுடன் எப்போதும்போல அரசியல் பேச்சு, அளவளாவல், அலசல் எல்லாம் இருந்தாலும் அவர்கள் வயதொத்தவர்களின் கருத்துகள் அயர்ச்சி தருவதாக இருந்தது. 
 
- வீட்டில் தொலைக்காட்சி இல்லையென்றாலும் முகநூலும் இணையமும் அதைவிடவும் பரபரப்பாகத் தகவல்களைத் தந்தபடி இருந்ததால், இல்லாத BP-யை வரவைத்துவிடுமோ என்று கொஞ்சம் விலகியிருந்தேன்.
 
- சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலின்போது மதியம்தான் போகமுடிந்தது. கொளுத்தும் வெயிலில் நின்று மயக்கமே வந்துவிட்டது. அதனால், இந்த முறை காலை ஏழரை மணிக்கே கிளம்பியாயிற்று. 
 
- சாலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் ஓட்டுப்போட ஊருக்குப் போகிறார்களா அல்லது இன்றும் பணிக்குச் செல்லவேண்டிய கட்டாயமா என்று தெரியவில்லை. எல்லா அலுவலகங்களும் தேர்தலுக்கு விடுமுறை அறிவிக்கவேண்டுமே என்று நினைத்துக்கொண்டேன்.
 
- ஓட்டுச் சாவடிக்கு நூறு மீட்டர் தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஓட்டுச் சாவடியை நோக்கி நடக்கும்போது எதிர்ப்பட்ட தெரிந்த முகங்களுக்கு முகக் கவசம் அணிந்திருந்ததால் என்னை அடையாளம் தெரியவில்லை. 
 
- கொஞ்சம் பரபரப்பாக எதிரே வந்த தம்பதியர் ஓட்டுப்போட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நான் வரிசையில் நிற்கும்போது ஓட்டுச் சாவடியில் அவர்களின் பூத்தைத் தேடிக்கொண்டு இருந்தனர். வாக்காளர் அட்டை, பூத் ஸ்லிப் இரண்டில் எதைக் கொண்டுவரப் போனார்கள் என்பது தெரியவில்லை. 
 
- வாயிலில் நின்ற காவல்துறையினரிடம் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த மாநகராட்சி ஊழியரிடம் என் வார்டுக்கான பூத்தைத் தெரிந்துகொண்டேன். 
 
- பூத் நுழைவுவாயிலில் கதவு எண்போல வார்டு எண் தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும் கவனத்தை ஈர்க்கவில்லை. குழப்பத்துடன் அலைந்தவர்களிடம் மாநகராட்சி ஊழியரிடம் கேளுங்கள் என்று கைகாட்டினாலும் வரிசையில் நிற்பவர்களிடம் கேட்பதையே விரும்பினர். 
 
- அதற்குள் வரிசையில் நின்ற சில பேர் பூத் ஸ்லிப் வாங்குவதற்காக வரிசையைவிட்டு நகர்ந்தார்கள். வழக்கமாக வீட்டுக்கே வந்து பூத் ஸ்லிப் தருவார்கள். இந்த முறை https://electoralsearch.in/ இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்திருந்தாலும் சின்னக் குழப்பம். நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் இதுகுறித்த அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. 
 
- பூத் ஸ்லிப் வாங்குவதற்காக வாக்குச் சாவடியில் இருந்து 500 மீட்டர் தூரம்வரை நடக்கவேண்டியிருந்தது. திரும்பிவருவதற்குள் சில பூத்களில் வரிசை நீண்டிருந்தது. ஆதார் அட்டையும் கேட்கிறார்கள் என்று சன்னமான குரலில் சொன்னார் எனக்கு முன்னால் நின்ற பெண். போனில் இருந்ததைத் தேடி எடுத்துவைத்தேன். 
 
- பெண்கள் வரிசை மெதுவாகவே நகர்ந்தது. வயதான பெண் ஒருவர் முன்னே செல்ல வழிவிட்டோம். பூத்தை நெருங்கும்போது ஐந்தைந்து பேராக சானிடைசரும் வலது கைக்குமட்டும் பாலிதீன் கையுறையும் வழங்கப்பட்டது. பக்கத்து பூத் வரிசையில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் இங்கே வந்து கையுறை வாங்கிக்கொண்டு இன்னும் இரண்டு வேண்டும் எனக் கேட்கவும் தரமுடியாதென்று மறுத்தார் சுகாதாரப் பணியாளர். 
 
- அதற்குள் உள்ளே ஏதோ சின்னக் குழப்பம், பேச்சுக் குரல்கள். பூத் வாயிலில் இருந்த காவல்காரர் 'என்ன இவ்வளவு நேரமாகிறது, என்ன நடக்குது' என்று சலித்துக்கொண்டார். அப்போது காலை மணி எட்டேகால். 
 
- கையில் நோட்டும் பேனாவும் எடுத்துக்கொண்டு எத்தனை ஓட்டுப் பதிவாகியிருக்கிறது என்று கேட்க வந்தார் ஒரு பெண். முதல் ஒரு மணி நேரத்தில் ஐம்பது ஓட்டுக்கள் என்பதைக் குறித்துக்கொண்டார். வழக்கத்தைவிட கூடுதலா குறைச்சலா என்று தெரியவில்லை. நேரம் செல்லச்செல்ல நிறையபேர் வருவார்களோ.
 
- பூத்தினுள் மின்விசிறி அதிவேகமாகச் சுழன்றது. பின்மதியம் அடிக்கப்போகும் வெயிலுக்கு இது போதுமா என்று தோன்றியது. கொஞ்சம் மரங்கள் நிறைந்திருந்த பள்ளி வளாகம் என்பதால் வெயில் அவ்வளவு கடுமையாகத் தெரியாதோ என்று தேற்றிக்கொண்டேன். 
 
- வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட பெரியவர் என் கையில் வைத்திருந்த சானிடைசர் குப்பியைப் பார்த்ததும் 'கொஞ்சம் கொடுங்களேன்' என்றார். 'உள்ளே தருகிறார்கள்' என்றேன். 'இல்லை, எதுக்கும் கொஞ்சம் போட்டுக்கிறேன்' என்றவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொடுத்தேன். 'உள்ளே கூட்டமா' என்று கேட்டபடியே என் பதிலுக்குக் காத்திராமல் நடந்தார்.
 
- வரும்வழியில் சூப்பர் மார்க்கெட் காய்கறிக் கடை எல்லாம் திறந்திருந்தது. உள்ளே சென்று பொருட்களை வாங்கியபடியே 'ஓட்டுப் போட்டாச்சா' என்று விற்பனைப் பகுதியில் இருந்த இளம்பெண்ணைக் கேட்டேன். 'லீவு இல்லை' என்றார். இன்னொருவருக்கு ஓட்டுரிமை ஊரில் இருக்கிறதாம்.
இப்படி எத்தனை ஓட்டுக்கள் பதிவாகாமல் விட்டுப்போகிறதோ என்று யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.
 

தேர்வு ஜுரம்

 


பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரத்தில் தொழில்நுட்பத் தேர்வொன்றை எழுதினேன். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும் குறிப்பிட்ட தேதிக்குள் எழுதிமுடித்தால் சில சலுகைகளை அறிவித்திருந்தது அலுவலகம். ஏற்கனவே குவிந்துகிடக்கும் வேலையில் தொழில்நுட்பப் பாடத்தைப் படிப்பது அயற்சியாகத் தோன்றியதால் இந்த விஷயத்தை முற்றிலும் மறந்துவிட்டேன். என்னுடைய குழுவில் இருக்கும் ஒரு பெண் இந்தத் தேர்வை எழுதிமுடித்தார் என்ற அறிவிப்பையும் பாராட்டையும் பார்த்தபோதுதான் நினைவுக்கு வந்தது. என்னுடைய பாராட்டையும் அவருக்குத் தெரிவித்துவிட்டு எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேட்டேன். 

 
நீங்களும் எழுதலாம், இன்றே பதிவுசெய்யுங்கள் என்று ஊக்குவித்ததோடு அதற்கான வழிமுறைகளையும் சுட்டிகளையும் பகிர்ந்துகொண்டார். அலுவலகம் தரும் சலுகையைப் பெறவேண்டுமென்றால் அடுத்த நாளே தேர்வெழுதி முடிக்கவேண்டும் என்பதையும் சொன்னார். இரண்டே நாளில் சாத்தியமா என்ற கேள்வியும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. இருந்தாலும் துணிந்து பதிவுசெய்தேன். 
 
"எங்களையெல்லாம் படி படின்னு சொல்றேயில்லை. நீ ஒழுங்காப் படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாரு." "என்ன படிக்காம சுத்தற." விஷயம் தெரிந்ததும் வீட்டில் ஒரே கேலி கிண்டல். நேரம்! தேர்வில் வெற்றிபெறுவது மானப் பிரச்சினையாகவும் ஆகிப்போனது. பாடங்களும் பயிற்சித் தேர்வுகளும் இணையத்தில் இலவசமாகக் கிடைத்தன. இரண்டு நாளும் அலுவலக, தனிப்பட்ட வேலைகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். 
 
வீட்டிலிருந்து எழுதும் இணையவழித் தேர்வென்பதால் தேர்வை நடத்தும் பன்னாட்டு நிறுவனம் பல விதிமுறைகளை விதிக்கிறது. தேர்வுக் கண்காணிப்பாளர் கிடைக்கும் நாளிலும் நேரத்திலும்தான் தேர்வெழுதமுடியும். உங்கள் இணைய இணைப்பு, மடிக்கணினியின் மைக், காமிரா எல்லாம் சரியாக வேலைசெய்கிறதா எனச் சோதிக்கப்படும். நீங்கள் தேர்வெழுதப்போகும் அறையை முன்னரே முடிவுசெய்து அங்கிருந்துதான் இந்தச் சோதனைகளைச் செய்யவேண்டும். கூடவே அறையை நான்கு கோணங்களில் இருந்து படம்பிடித்துப் பதிவேற்றவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணமொன்றையும் கையில் வைத்திருக்கவேண்டும்.
 
இந்தத் தேர்வை எழுதுபவர்கள் அலுவலகத்தின் தகவல் பரிமாற்ற / அரட்டை தளத்தில் நாள்முழுவதும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபடியே இருப்பார்கள். பயனுள்ள பல நுணுக்கமான தகவல்கள் இருக்குமென்றாலும் என்னென்ன விதத்திலெல்லாம் இடையூறு ஏற்படலாம் என்பது பதட்டமேற்படுத்தும். கண்காணிப்பாளர் கிடைக்காததால்  சில சமயங்களில் தேர்வு நேரமும் நாளும் ஒத்திவைக்கப்படும். கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாகத் தேர்வெழுதமுடியாமல் போகலாம். தேர்வெழுதும்போது கண்காணிப்பாளர் மடிக்கணினியின் காமிரா மூலமாக உங்களைக் கவனித்துக்கொண்டிருப்பார். நீங்கள் தேவைக்கு அதிகமாக அசைவதுபோலவோ யாரிடம் இருந்தாவது உதவிபெறுவதுபோலவோ தெரிந்தாலும் இரைச்சலும் சத்தமும் அளவுக்கதிகமாக இருந்தாலும் தேர்வு உடனடியாக நிறுத்தப்படும். இன்னும் எத்தனை எத்தனையோ.
 
எனக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுநேரம் இரவு பதினொன்றரை மணி. நாள்முழுவதும் படித்துக்கொண்டும் அலுவலக வேலை, கூட்டம் என பரபரப்பாகவும் இருந்ததால் குட்டித்தூக்கம் ஒன்றைப் போட்டு எழுந்தேன். கணினி, அலைபேசி இவற்றின் வழியாகத் தேர்வுக்கான சில தொழில்நுட்ப முன்னேற்பாடுகளைச் செய்துமுடித்ததும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுக் கண்காணிப்பாளர் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். என் மேசைக்கு அருகில் அலமாரியில் இருந்த புத்தகங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அவையெல்லாம் தமிழ்ப் புத்தகங்கள் என்று விளக்கமளித்தபடியே அறையின் மூலையில் அடுக்கிவைத்தேன். மீண்டும் ஒருமுறை என் மேசையைக் காட்டச் சொல்லிவிட்டுத் தேர்வைத் துவக்கிவைத்தார். 
 
ஒரு மணிநேரத் தேர்வுதான் என்றாலும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. சில கேள்விகளுக்கான பதிலை மூளையைக் கசக்கிப் பிழிந்து நினைவுக்குள் கொண்டுவர முயன்றேன். ஊம்ஹூம்! பல சொற்றொடர்கள் ஒரேமாதிரி இருந்ததால் எது சரியான விடை என்பதில் குழப்பம் ஏற்பட்டது. சில கேள்விகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்ததும் அவற்றில் இருந்த முடிச்சு புலப்பட்டது, விடையும் தெரிந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகும் பெருமூச்சுவிட்டபடியே மீண்டும் ஒருமுறை சரிபார்த்தேன். 
 
ஒரு வழியாகத் தேர்வை எழுதி முடிக்கும்போது மணி பன்னிரெண்டே முக்கால். நம்மூர்த் தேர்தல்போல இல்லாமல் முடிவு உடனே கணினியின் திரையில் ஒளிர்ந்தது. வெற்றிபெறத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். 
 
"ஆத்தா, நான் பாஸாயிட்டேன்," என்று உற்சாகமாகக் கத்திக் குதிக்கவேண்டும்போல இருந்தது. நள்ளிரவென்பதால் சத்தமில்லாமல் குடும்பத்தினரிடம் விவரத்தைச் சொல்லிவிட்டுப் படுக்கையில் விழுந்தேன். 
 
புகைப்படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம்