திங்கள், 7 செப்டம்பர், 2020

கொரோனா வெளியேற்றம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்க் கவிஞர்கள் 103 பேர் எழுதிய ஊரடங்கு காலக் கவிதைகள், முனைவர் திரு. கே. எஸ். சுப்ரமணியம் அவர்களால் #LOCKDOWN_LYRICS என்ற பெயரில் உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி வெளியீடாக வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் என் கவிதையும் இடம்பெற்றுள்ளது. முனைவர் கே. எஸ். அவர்களுக்கு நன்றி.
 
 



புத்திகெட்ட அரசர்களும்
கோமாளி மந்திரிகளும்
பகடையை உருட்டி
இங்கேயும் அங்கேயுமாக
ஆட்டக் காய்களைப்போல அலைக்கழிக்கும்
வெந்தடத்தில் வேகும்
மக்களின் கால்களில்
கருடனின் வலுவான
இறக்கைகள் முளைக்கட்டும்.

 

பால்வற்றிய தாயின்
முலையில் வாயொற்றி
வறண்ட காற்றை மட்டுமே
உறிஞ்சும் சிசுவின் வயிறு நிறைக்க
வருணனின் கருமேகங்கள்
பால்மழை பொழியட்டும்.

 

தோளிலும் தலையிலும்
வறிய பெற்றோர்
ஈட்டிய சொற்ப சொத்துக்களை
மூட்டையாகச் சுமந்து
நடக்கும் இளந்தளிரினைத்
தோளில் சுமந்துசெல்ல
அனுமன் இங்கே அவதரிக்கட்டும்.

 

ஆனால்
இதிகாசப் புருஷர்களின் வீரதீரங்களை
துக்ளக்குகளின் கோமாளித்தனங்கள்
இரத்து செய்துவிடுகின்றன. 

முட்டாள்களின் ஆட்சியில்
அவதாரங்கள் அரிதாரம்பூசி
அருள்பாலிக்க வந்தாலும்
ஊரின் எல்லைகளில்
முட்டிமோதும் மக்கள் கூட்டத்தில்
தொலைந்துபோய் பரிதவித்து
வந்தவழி தெரியாமல்
ஊர் எல்லைகளில் திரிகின்றனர்
என்ற செய்தி வருகிறது நாளேட்டில்.

 

#கார்குழலி #கொரோனா #Lockdown_Lyrics #karkuzhali #Discovery_Book_Palace

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக