புதன், 30 அக்டோபர், 2024

தீபமேற்றும் திருவிழாக்கள்

 

                        

நெருப்பைக் கண்டுபிடித்த கதை

ஆதிமனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகள் பட்டியலில் முதலிடம் பெறுவது நெருப்பு. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக் காலக்கோட்டையே புரட்டிப்போட்டது. மின்னலினால் உருவாகும் காட்டுத்தீயையும் கரடுமுரடான பாறைகளின் உரசலிலும் பிறக்கும் தீப்பொறியையும் கண்ட மனிதன் அதனால் ஏற்படும் அழிவையும் அழிவிலிருந்து பிறக்கும் புதிய தொடக்கத்தையும் மாற்றத்தையும் கவனித்தான். அந்த நெருப்பை வேண்டிய நேரத்தில் உருவாக்கவும் பெரும் அழிவை ஏற்படுத்தாதபடி கட்டுக்குள் வைக்கவும் தேவையான அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டான்.

ஆதிமனிதனுக்குத் தேவையான ஒளி, கதகதப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை அளித்தது நெருப்பு. மேம்பட்ட வேட்டைக் கருவிகளை உருவாக்கவும் உணவைப் பதப்படுத்தவும் சூரியன் மறைந்த பிறகும் பொழுதை நீட்டிக்கவும் வழிசெய்தது. வேட்டை விலங்குகளை விரட்டவும் குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கவும் உதவியது. இதனால் ஆதிமனிதன் புதிய நிலப்பரப்புகளுக்குக் குடியேற முடிந்தது. இவையெல்லாம் 1.7 மில்லியன் முதல் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்பதை எரிந்த மரச் சாம்பலின் நுண்துகளை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

*

நெருப்பு எப்போது விளக்கானது

நெருப்பைக் கண்டுபிடித்தது சரி, முதன்முதலில் எப்படி விளக்கேற்றி இருப்பார்கள்? குழிவான கல்லொன்றில் விலங்குக் கொழுப்பை நிரப்பி தாவர நாரைத் திரியாகப் பயன்படுத்தி எரித்திருக்கலாம். மத்தியதரைக்கடல் பகுதியிலும் மத்திய கிழக்கிலும் பெரிய சிப்பிகளை விளக்காகப் பயன்படுத்தினார்கள். பிறகு களிமண், வெண்சலவைக்கல், உலோகம் என வெவ்வேறு பொருட்களால் விளக்குகளைத் தயாரித்தனர். தற்போது நாம் பயன்படுத்தும் அகல் விளக்குகளில் திரியைத் தூக்கி நிறுத்தவும் திரி வேகமாக எரிந்துவிடாமல் இருக்கவும் சிறிய மூக்குபோன்ற முனையிருப்பதைக் காணலாம். இந்த வடிவத்தை முதலில் அமைத்தவர்கள் சீனர்களும் எகிப்தியர்களும்தான். திரியைக் குழல்போன்ற அமைப்பின் வழியே நுழைத்து அதன் எரியும் பகுதி விளக்குக்கு வெளியே தொங்குவதுபோன்ற வடிவத்தை முதலில் அமைத்தவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்கள்; பின்னர் இது இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் பரவலாகப் பயன்பட்டது.

பண்டைய கிரேக்கத்தில் பொஆமு 7ஆம் நூற்றாண்டில்தான் விளக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதுவரையில் தீப்பந்தங்களையும் நெருப்புக்கலன்களையும் உபயோகித்தவர்கள் மண்விளக்குகளைத் தயாரிக்கத் தொடங்கினர். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட திரிகளை எரிக்கப் பல முகங்களையும் கையில் தூக்கிச் செல்வதற்கான பிடியையும் கொண்டிருந்தன. லாம்ப் (lamp) என்ற ஆங்கிலச் சொல் தீப்பந்தம் என்ற பொருள் தரும் லம்பாஸ் (lampas) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது.

சூரியன் மறையும் அந்தி வேளையில் வசிப்பிடத்துக்கு ஒளியூட்டுவதற்குத் தீபங்களை ஏற்றும் வழக்கம் நாளடைவில் கொண்டாட்டம், வழிபாடு, விழா போன்ற முக்கிய நாட்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய பழக்கமாகவும் சடங்காகவும் சமய மரபாகவும் மாறியிருக்கலாம். உலகெங்கிலும் எல்லாக் கலாசாரங்களிலும் இனங்களிலும் தீபமேற்றும் வழக்கத்தைக் காணமுடிகிறது.

*

இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டம்

இந்தியா ஒரே நாடாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் எண்ணற்ற இனங்களைச் சேர்ந்த மக்களின் மொழியும் மரபும் கலாசாரமும் வெவ்வேறாக இருப்பதால் வண்ணமயமான ஓவியத் தீற்றலாகக் காட்சியளித்துக் களிப்பூட்டுகிறது. தீபாவளி பெரும்பாலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையென்றாலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு பின்னணி. தீபாவளிக் கொண்டாட்டத்தின் மையமான முக்கியக் கடவுளர்களும் அவர்களைப்பற்றிய கதைகளும் புராணங்களும் சுவாரசியமானவை.

தென்னாட்டில் தீபாவளி


தமிழ்நாட்டில் தமிழ் நாட்காட்டியின் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்திய நாட்காட்டியின் ஐப்பசி இறுதி அல்லது கார்த்திகை மாதத் தொடக்கத்தில் இந்த நாள் வருகிறது. இது வருடத்தின் மிக நீண்ட இரவைக்கொண்ட நாளாகவும் இருக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் தீபாவளி கிருஷ்ணரோடு தொடர்புடைய கொண்டாட்டமாக இருக்கிறது. மக்களைக் கொடுமைப்படுத்திய நரகாசுரன் என்னும் அரக்கனை கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமா கொல்கிறார். தான் இறந்த தினத்தை மக்கள் பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு சிறப்பிக்கவேண்டும் என்று நரகாசுரன் வரம் கேட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் தீபாவளியின்போது அகல்விளக்குகளை ஏற்றும் வழக்கமில்லை. தீபாவளி முடிந்து கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று கடைப்பிடிக்கிறார்கள்.

கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மாலையில் கோவில்களிலும் வீடுகளிலும் அகல்விளக்கு ஏற்றுவார்கள். கோவிலின் முன்புறத்தில் வாழை மரம் நட்டு பனையோலைகளைச் சுற்றி அடுக்கி சொக்கப்பனை ஏற்றி அதனைச் சிவபெருமானின் சோதி வடிவாகக் கருதி வழிபடுவார்கள். சிவன் அக்னிப் பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் செம்பு, இரும்பு கொப்பரையில் எண்ணெயிட்டுத் தீபம் ஏற்றப்படுகிறது.

*

தீபமேற்றும் இந்தியப் பண்டிகைகள்

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இராமனோடு தொடர்புடைய பண்டிகையாக இருக்கிறது தீபாவளி. தந்தையின் கட்டளைக்கிணங்கி வனவாசம் சென்ற இராமனின் மனைவி சீதையை, இலங்கையின் மன்னனான இராவணன் கவர்ந்து செல்கிறான். தம்பி இலக்குவனின் துணையோடு அவனைக் கொன்று சீதையை மீட்டுத் தன்னுடைய நாடான அயோத்திக்கு இராமன் திரும்பும் நாளே தீபாவளிப் பண்டிகை என்பது நம்பிக்கை. 

வெற்றியோடு வரும் இராமனை வரவேற்பதற்காக மக்கள் வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலம் வரைந்து மண்ணாலான அகல்விளக்கேற்றி ஒளியூட்டுகிறார்கள். கூடவே இராவணனின் உருவப் பொம்மையை எரிக்கிறார்கள். இது தீயவற்றை அழித்து நல்லவற்றை நீடித்திருக்கச் செய்வதைக் குறிக்கிறது.

மஹாராஷ்டிராவில் செல்வம், வளம் இரண்டுக்கும் அதிபதியான லட்சுமியை வழிபடுகிறார்கள். அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தீபாவளிப் பண்டிகை தொடங்குகிறது, தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான தனத்ரயோதசி அல்லது தன்தேரஸன்று லட்சுமி, குபேரன் இருவருக்கும் பூஜை செய்கிறார்கள். தங்க நகைகளையும் வீட்டுப் பொருட்களையும் வாங்குகிறார்கள்.

இரண்டாவது நாள் நரக சதுர்த்தசி, சோட்டி தீவாளி, காலி சௌதசி எனப் பலவாறாக அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு முந்தைய தினம் இருட்டாக இருப்பதால் காலி, அதாவது கருப்பு, சௌதசி, அதாவது பதினான்காவது நாள் என்று பொருள். சில பகுதிகளில் காளிதேவிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

அதற்கடுத்த நாள் லட்சுமியின் வழிபாட்டுக்கானது. சாகாவரம் தரும் அமிழ்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அதிலிருந்து முதலில் லட்சுமியும் அடுத்ததாக, அமிழ்தக் கலசத்தைக் கையிலேந்தியபடி ஆயுர்வேத சிகிச்சையின் அதிபதியான தன்வந்திரியும் தோன்றினராம். அன்றைய தினம் விதவிதமான இனிப்புகளைச் செய்து உண்டு மகிழ்கிறார்கள், வண்ண ரங்கோலிக்களை வரைகிறார்கள்.

நான்காம் நாளான பலிப்ரதிபாதாவன்று பூமிக்குத் திரும்பும் மகாபலிச் சக்கரவர்த்தியை வணங்குகிறார்கள். வாமன அவதாரம் எடுக்கும் மகாவிஷ்ணுவால் பாதாளலோகத்துக்குத் தள்ளப்படும் மகாபலி ஒவ்வொரு ஆண்டும் பூமிக்குத் திரும்பி வந்து தன்னுடைய மக்களை நேரில் சந்திக்கிறான் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

கடைசி நாளான பாவ் பீஜ் அல்லது பாய் தூஜன்று சகோதர சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதத்தில் கொண்டாடுகிறார்கள். பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து, ஆரத்தி எடுத்து திலகமிடுகிறார்கள். பதில் மரியாதையாக சகோதரர்கள் அக்கா தங்கைகளுக்குக் காசு, பரிசு என வாரி வழங்குவதோடு அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளிக்கிறார்கள். வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகள் ஒன்றுகூடும் நாளாகவும் இருக்கிறது.

கர்நாடகாவில் தமிழ்நாட்டைப்போலவே நரகாசுரனின் வதத்தையொட்டி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றாலும் மஹாராஷ்டிரத்தின் லட்சுமி பூஜையையும் பலிப்ரதிபாதாவையும் அனுசரிக்கிறார்கள். கேரளத்தில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

மேற்கு வங்கம், பீஹார், ஒடிஷா, அஸ்ஸாம் பகுதிகளில் காளிதேவியை வணங்கும் தினமாக இருக்கிறது தீபாவளி. வணிகர்களின் குழுக்களும் மற்ற மக்களும் கலை, கல்விக்கு அதிபதியான சரசுவதியையும் கணக்காளராக இருந்து செல்வத்தை மேலாண்மை செய்யும் கடவுளான குபேரனையும் கும்பிடுகிறார்கள். அங்கேயும் தன்தேரஸ், சோட்டி தீவாளி, பாய் தூஜ் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலுள்ள கோவாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நரகாசுரனின் உருவப் பொம்மையை விடியற்காலைப் பொழுதில் எரிக்கிறார்கள். இந்தப் பொம்மையை அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றுகூடி அட்டை, காகிதம், பழந்துணி ஆகியவற்றைக்கொண்டு உருவாக்குகிறார்கள். எரித்துமுடித்த பிறகு, நரகாசுரனைக் கொன்ற இரத்தக் கறையைக் கழுவுவதற்காக தலையோடு எண்ணெய்க் குளியல் போடுகிறார்கள்.

*

இந்தியாவின் ஆயிரக்கணக்கான பழங்குடி இனங்களில் பருவகால மாற்றத்தையொட்டிச் சுவாரசியமான பல கொண்டாட்டங்கள் நடக்கின்றன. தெலுங்கானாவின் ராஜ்கோண்ட், கோலம் இனங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளி சமயத்தில் டண்டாரி-குஸ்ஸாத் என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்னர் தொடங்கி அமாவாசையன்று நிறைவுறுகிறது. அறுவடைக் காலம் முடிந்ததும் ஆடல், பாடலோடு இனத்தின் இளைஞர்களுக்குப் பெண் தேடும் படலம் தொடங்குகிறது.

டண்டாரி பண்டிகையின்போது கோண்ட் மக்கள் ஆடும் குஸ்ஸாடி நடனம் எளிமையான அசைவுகளையும் அடவுகளையும் கொண்டது. சிவப்பு நிற ஆடையையும் மல்ஜாலின பூரா எனப்படும் மயில் தோகை, ஆட்டுக் கொம்பு, மணிகளாலான கிரீடத்தையும் தலையில் அணிகிறார்கள். கழுத்தில் நெய்பால்க் ஹார் எனப்படும் காட்டு விதைகளாலான மாலையை அணிகிறார்கள். கால்களில் சிறிய சலங்கைகளையும் கழுத்திலும் இடையிலும் பெரிய மணிகளையும் கட்டிக்கொள்கிறார்கள். முகத்தில் சாம்பலைப் பூசி வட்டம், அலை என வடிவங்களை வரைகிறார்கள். பறா, தப்பு, டோல், காலிக்கொம், துடும் போன்ற பலவகையான பழங்குடி இசைக்கருவிகளை இசைத்து நடனமாடுகிறார்கள்.

*

தீபாவளிக்கு ஜைன மதத்தோடு நெருங்கிய தொடர்பிருக்கிறது. இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுள் ஒருவரான மகாவீரர் மோட்சமடைந்த நாளை தீபாளிகா என அழைக்கிறார்கள், விளக்கேற்றி ஒளியூட்டுகிறார்கள். ஜைனர்களில் ஒரு பிரிவினரான சுவேதாம்பர ஜைனர்கள் மூன்று நாட்கள் உணவுண்ணாமல் விரதமிருந்து மகாவீரரின் போதனைகளடங்கிய உத்தரதியாயன் சூத்திரத்திலிருந்து வழிபாட்டுப் பாடல்களைப் படிக்கிறார்கள். எளிமை, அமைதி, துறவறம், அறம்செய்தல், கருணை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது அவசியமென்பதால் பட்டாசு, வெடி போன்றவற்றை இவர்கள் வெடிப்பதில்லை.

சீக்கியர்களின் விடுதலைப் போராட்டத்தோடு தீபாவளிக்கு நெருங்கிய தொடர்புண்டு. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த் சாஹிப் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தன்னுடைய தந்தை குரு அர்ஜுனைச் சிறைப்பிடித்துக் கொன்ற முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை எதிர்த்து நின்றார். அவரைக் கைதுசெய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார் ஜஹாங்கீர். தன்னுடன் சிறைப்பிடிக்கப்பட்ட 52 இளவரசர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளியே செல்வேன் என்றார். அப்படி அவர்கள் விடுவிக்கப்பட்ட தினத்தை பண்டி சோர் திவஸ் என்று அழைக்கிறார்கள். வீடுகளிலும் குருத்வாராக்களிலும் தீபமேற்றி ஒளியூட்டி கீர்த்தன்களைப் பாடிக் கொண்டாடுகிறார்கள்.

பொஆமு 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷவர்த்தனர் இயற்றிய சமஸ்கிருத நாடகமான நாகானந்தத்தில் தீபங்களையேற்றி வழிபடும் தீபப்பிரதிபாதோத்ஸவா என்ற பண்டிகையைக் குறிப்பிடுகிறார். பொஆமு 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத கவிஞரும் நாடகாசிரியரும் விமர்சகருமான ராஜசேகரா இயற்றிய காவியமிமாம்ஸாவில் வீடுகளுக்கு வெள்ளையடித்து விளக்கேற்றிக் கொண்டாடும் திருவிழாவைப் பற்றிய குறிப்பினைக் காணமுடிகிறது. டெல்லி சுல்தான்கள், முகலாய மன்னர்களின் ஆட்சி க்காலத்தில், குறிப்பாக இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது, ஆனால் அவரது வழித்தோன்றலான அவுரங்கசீபின் ஆட்சியில் அரசு சார்பில் நடந்த கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன என வரலாற்றுக் குறிப்புகள் சுட்டுகின்றன.

 

*

இந்திய கலாசாரத்தோடு நெருங்கிய தொடர்புகொண்ட நாடுகளிலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்த இந்தியர்களின் வசிக்கும் நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப்போலவே மற்ற ஆசிய கலாசாரங்களிலும் தீபமேற்றும் திருவிழாக்கள் உள்ளன. அந்தந்த நிலத்தின், அங்கு வாழும் மக்களின் அடிப்படை உணர்வுகளையும் நாட்டங்களையும் பிரதிபலிக்கின்றன.

தென்கொரிய விளக்குத் திருவிழா

யண்டெங்க்வே (Yeondeunghoe) திருவிழா புத்தரின் பிறப்பையொட்டித் தென்கொரியாவில் கொண்டாடப்படுகிறது. தற்போது வசந்தகாலத்தை வரவேற்கும் பண்டிகையாகவும் உருப்பெற்றுள்ளது. யண்டெங்க்வே என்றால் தாமரை விளக்குத் திருவிழா அல்லது தீபமேற்றும் திருவிழா என்று பொருள். இந்தப் பண்டிகையின்போது ஏற்றும் விளக்குகளை ஒளி, நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றின் குறியீடாகக் கருதுகின்றனர்.

இந்தத் திருவிழா சுமார் 1200 ஆண்டுக் காலப் பழைமைமிக்கது என வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. பொஆமு 57ஆம் ஆண்டு முதல் பொஆ 935ஆம் ஆண்டு வரையில் அந்தப் பகுதியை ஆண்டது சில்லா வம்சம். அந்தக் காலகட்டத்தில் கியோங்க்ஜூவில் உள்ள ஹ்வங்க்யோங்க்ஸா கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் தொடக்க நாளன்று புத்தரின் குழந்தை வடிவச் சிலையைப் புனித நீராட்டும் சடங்கு நடைபெறும். பிறகு புத்தருக்கு காணிக்கையாக எண்ணற்ற விளக்குகளை ஏற்றிவைத்தனர். கூடவே விவசாயிகளையும் நாட்டையும் காக்கவேண்டி டிராகன் கடவுளுக்கு வழிபாடு நடத்தினர்.

யண்டெங்க்வே திருவிழாவுக்கான விளக்குகளை ஹஞ்சி தாளினால் செய்கின்றனர். இந்தத் தாள் மல்பெர்ரி மரப் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மூங்கில் குச்சிகள், அலுமினியக் கம்பிகளினாலான சட்டத்தைச் சுற்றி பல வண்ணங்களும வடிவங்களும் கொண்ட ஹஞ்சி காகித் தாளையொட்டி உள்ளே விளக்கைப் பொருத்துகிறார்கள். விளக்குகளுக்குப் பட்டாலான உறைகளையும் அமைப்பதுண்டு.

கொக்கு, மீன், மலர், முரசு ஆகிய வடிவங்களில் செய்யப்படும் விளக்குகள் மக்கள் மத்தியில் பிரபலம். தற்காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர்கள், கார்ட்டூன் சித்திரக் கதாபாத்திரங்கள், ஃபீனிக்ஸ், ட்ராகன், புலி, கப்பல் வடிவங்களிலும் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. பௌத்த மதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட தாமரை மலர் வடிவ விளக்குகள்தான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கண்ணியம், மாண்பு, பக்தனின் உண்மையான இயல்பை வெளிக்கொணரும் தன்மை இவற்றோடு தொடர்புகொண்டது தாமரை. இந்தத் திருவிழாவையொட்டித் தாமரை விளக்குத் தயாரிக்கக் கற்றுத் தரும் வகுப்புகள் தென்கொரியாவில் மட்டுமின்றி உலகமுழுவதுமே நடக்கின்றன.

*

சீனாவின் ஷாங்க்யுஆன் திருவிழா

ஆசியாவின் மிகப் பெரிய நாடான சீனாவில் கொண்டாடப்படும் ஷாங்க்யுஆன் (Shangyuan) விளக்குத் திருவிழா 2000 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும் பௌர்ணமியன்று கொண்டாடப்படுகிறது. ஹான் வம்சத்தைச் சேர்ந்த பேரரசர் வென் என்பவரின் காலத்தில் தொடங்கப்பட்ட வழக்கம். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பேரரசர் மிங் பௌத்த மதத்தைப் பின்பற்றியவர்.

புத்தரின் காலமுதலே பௌத்த பிட்சுக்கள் உபசதா என்றழைக்கப்பட்ட தினத்தில் வழிபாட்டுத் தலங்களில் விளக்குகள் ஏற்றி வைக்கும் வழக்கம் இருந்தது. அதையொட்டி பேரரசர் மிங் அதே தினத்தன்று வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், அரண்மனை என எல்லா இடத்திலும் விளக்கேற்ற வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்தார். அப்போது முதலே மக்கள் அதை பின்பற்றத் தொடங்கினர். பனிக்காலத்தில் மாலையானதும் விளக்குகளின் உதவியோடு தங்களின் வேலைகளைத் தொடர்வதற்கு வசதியாக இருந்த வழக்கம் பின்னர் மரபாக மாறியிருக்கலாம். ஹான் வம்சத்தினரின் ஆட்சியில் இந்த்த திருவிழா வட விண்மீனின் தேவதையான டி யின்னோடு (Ti Yin) தொடர்புடையதாக இருந்தது.

இந்தத் திருவிழாவோடு தொடர்புடைய இன்னொரு புராணக்கதை தையி (Taiyi) என்ற சொர்க்கத்துக்கு அதிபதியான கடவுளைப் பற்றியது. தையி மனிதர்களின் உலகின் விதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவன். அவனிடம் பதினாறு டிராகன்கள் இருந்தன. வறட்சி, புயல், பஞ்சம், நோய் ஆகியவற்றை நினைத்தபோது மனிதர்களின்மீது ஏவிவிடுவதற்கு இந்த டிராகன்களைப் பயன்படுத்தினான். சீனாவின் முதல் பேரரசரான ஷின் ஷி ஹூவாங்கின் (Qin Shi Huang) காலமுதல் அவருக்குப் பின் ஆட்சிபுரிந்த எல்லா அரசர்களும் தனக்கும் தன்னுடைய நாட்டு மக்களுக்கும் நல்ல பருவகாலத்தையும் உடல் நலத்தையும் தை யியிடம் வேண்டும் விழாதான் ஷாங்யுஆன் என நம்பப்படுகிறது.

பொஆமு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹான் வம்சப் பேரரசரான வூ என்பவரின் காலத்தில் இந்த விழா சிறப்புக் கவனம் பெற்றது. பொஆமு 104ஆம் ஆண்டில் இந்தத் தீபமேற்றும் திருவிழாவைச் சீனாவின் முக்கியமான விழாவாகக் இரவுமுழுவதும் கண்விழித்துக் கொண்டாடவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

*

ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் நெருப்பையும் அது தரும் ஒளியையும் இதத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து அதைத் தாங்களறிந்த வழியில் வழிபட்டனர்.

பிரனீஸ் மலைத்தொடர் கிராமத்தின் நெருப்புத் திருவிழா

ஐரோப்பாவின் தற்போதைய ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் நாடுகளின் எல்லைகள் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது பிரனீஸ் மலைத்தொடர். இந்தப் பகுதியில் ஒவ்வொரு வருடமும் உத்தராயணம் என்று அழைக்கப்படும் கோடைச்சூரிய கணநிலை (Summer Solstice) நாளன்று நெருப்புத் திருவிழா நடக்கிறது.

இரவு விழுந்ததும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எரியும் தீப்பந்தங்களை ஏந்தியபடி மலைகளில் இருந்து கீழிறங்கி அங்கே அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை ஏற்றுகிறார்கள். இந்தச் சடங்கில் ஈடுபடும் வளரிளம் பருவத்தினர் வளர்ந்து பெரியவர்களாவதைக் குறிக்கும் சடங்காக இருக்கிறது நெருப்புத் திருவிழா. கொண்டாட்டத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பணியும் பொறுப்பும் வழங்கப்படுகிறது. அந்தந்தப் பகுதியின் ஊர்த்தலைவரான மேயர் முதல் விளக்கை ஏற்றுகிறார். சில இடங்களில் ஊர் பூசாரி இதைச் செய்கிறார். சில பகுதிகளில் சமீபத்தில் திருமணமான இளைஞர் ஒருவர் மலைமேல் தீப்பந்தத்தைப் பற்ற வைத்துக் கீழே கிராமத்துக்கு இறங்கி வருகிறார்.

திருமண வயதை எட்டிய பெண்கள் திராட்சைப்பழரசத்தையும் இனிப்புகளையும் தயாரித்துத் தீப்பந்தத்தை ஏந்தி வருபவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். விடிந்ததும் எஞ்சிய சாம்பலைச் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள் ஊர் மக்கள். வீட்டையும் தோட்டம் துரவையும் பாதுகாக்கும் ஆற்றல் இந்தச் சாம்பலுக்கு உண்டு என்ற நம்பிக்கை நிலவுகிறது.

*

உலகின் முக்கியமான மதங்கள் ஆசியக் கண்டத்தில்தான் தோற்றம்கொண்டன என்பது ஆச்சரியமான விஷயம். இவற்றில் சில மதங்களில் புனித நாட்களில் விளக்கேற்றுவதும் நெருப்பை வழிபடுவதும் சடங்குகளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்துக்கள் நெருப்பைப் புனிதமாகக் கருதி அக்னி என்று பெயரிட்டு வழிபடுவது தெரிந்த விஷயம்தான். வேறு சில மதங்களைப் பின்பற்றும் மக்கள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்பது சுவாரசியமான விஷயம்.

ஹனுக்கா பண்டிகை

உலகின் பழைமையான மதங்களில் ஒன்றான யூத மதத்தின் ஹனுக்கா திருவிழா டிசம்பர் மாதத்தில் எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது யூத நாள்காட்டியின்படி கிஸ்லேவ் மாதத்தின் 25ஆம் நாளாகும். ஹனுக்கா என்றால் அர்ப்பணிப்பு என்று பொருள். எருசலேமிலிருந்த இரண்டாம் கோவிலைக் கைப்பற்றிப் புனரமைத்து மறுஅர்ப்பணிப்பு செய்ததைக் குறிப்பிடும் திருவிழா.   

பொஆமு 2ஆம் நூற்றாண்டில் நான்காம் ஆண்டியோகஸ் எபிஃபனேஸ் என்ற செலுசிட் பேரரசு மன்னன் யூதர்களின் நிலத்தைக் கைப்பற்றியதோடு அவர்களிடையே ஹெலனிய மதத்தைப் பரப்ப முற்பட்டான். அவனை எதிர்த்துப் போராடி நாட்டையும் மதத்தையும் காப்பாற்றினான் யூதாஸ் மக்கேபியஸ் என்ற யூத வீரன். அப்போது தங்களின் வழிபாட்டிடத்தையும் கைப்பற்றி அதைத் தூய்மைப்படுத்திப் புனரமைத்தான்.

செல்சிட் மன்னனிடமிருந்து மீட்ட கோவிலில் இருந்த எண்ணெய்ச் சாடியில் ஒரு நாளுக்கான புனித எண்ணெய் மட்டுமே மீதமிருந்தது. தெய்வ வழிபாட்டுக்கான எண்ணெய்யைத் தயார்செய்ய எட்டு நாட்கள் பிடிக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஏற்கனவே இருந்த ஒரு நாளுக்கான எண்ணெய்யிலேயே அடுத்த எட்டு நாட்கள் வரையிலும்  விளக்கு அணையாமல் எரிந்தது. இந்த மரபைப் பின்பற்றும்விதமாக ஹனுக்கா பண்டிகை எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது என யூதர்களின் புனித நூலான டல்முட் விளக்குகிறது.

ஹனுக்காவின்போது ஏற்றப்படும் விளக்கு மெனோரா எனப்படுகிறது, ஒன்பது கிளைகளைக் கொண்டது. மத்தியில் இருக்கும் கிளை மற்றவற்றைவிட உயரமாக இருக்கும். தற்காலத்தில் எண்ணெய் ஊற்றி எரிப்பதற்குப் பதில் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றனர். மத்தியில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியை ஷமஷ் என்கிறார்கள்; அதை முதலில் ஏற்றி, பிறகு அதைக்கொண்டு மற்றவற்றை ஏற்றவேண்டும்.

*

பண்டைய ஐரோப்பாவில் நெருப்பு வழிபாடு    

ஐரோப்பாவில் கிரீஸுக்குப் பக்கத்து நாடு அல்பேனியா. பண்டைய அல்பேனிய புராணத்தில் நெருப்புக்கான கடவுளுக்கு என் (En) அல்லது என்ஜி (Enji) என்று பெயர். இந்தப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவிய பிறகு என்ஜி அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டார். ஆனால் இன்றளவும் வியாழக்கிழமையை என்ஜ்டே (Enjte) என்றும் ஜூபிடர் எனப்படும் வியாழன் கிரகத்தை என்ஜேடி (Enjeti) என்றும் அழைக்கிறார்கள்.

பண்டைய கிரேக்க-ரோமானிய மரபில் நெருப்பை அதன் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு இரண்டாகப் பிரித்தனர். உணவைச் சமைக்கவும் வீட்டுக்குக் கதகதப்பூட்டவும் பயன்படும் நெருப்புக்கு ஒருவர், ஆயுதங்களை உருவாக்க உதவும் நெருப்புக்கு மற்றொருவர் எனத் தனிக் கடவுளர்களும் இருந்தனர். கிரேக்கக் கடவுளர்களின் பெயர் முறையே ஹெஸ்டியா, ஹெபாஸ்டியஸ்; அவர்களுக்கு இணையாக இருந்த ரோமானியக் கடவுளர்கள் முறையே வெஸ்டா, வல்கன். இந்தக் கடவுள்கள் கைத்திறனுக்கான கூட்டுறவுப் புரவலர்களாக இருப்பதோடு நகரங்களில் தீ விபத்து ஏற்படாமல் காக்கவும் செய்கிறார்கள். கிரேக்க-ரோமானியர்கள் கடவுளின் சன்னிதிக்கு எதிரில் தீ வளர்த்து அதில் விலங்குகளைப் பலிகொடுத்து வழிபட்டனர்.

பிரொமீதியஸ் என்ற கிரேக்க-ரோமானியக் கடவுளின் கதையைக் கேட்டிருக்கிறீர்களா? கடவுளர்க்கு மட்டுமே சொந்தமான நெருப்பைத் திருடி மனிதர்களிடம் தந்தவன். உலகின் முதல் பொதுவுடைமைச் சித்தாந்தவாதி மட்டுமல்ல, அதைச் செயல்படுத்தியவன் என்றும் சொல்லாம். அதற்காகக் கடவுளர்களால் தண்டிக்கப்பட்டு வாழ்க்கை முழுதும் கொடுமைப்படுத்தப்பட்டுத் துன்பம் அனுபவித்தான்.

*

பார்சிகளின் நெருப்பு வழிபாடு

பண்டைய பாரசீகத்தில் பொஆமு 6ஆம் நூற்றாண்டுவாக்கில் இறைத்தூதரும் சீர்த்திருத்தவாதியுமான சரதுஸ்ட்ரா தோற்றுவித்த மதம் ஜொராஸ்ட்ரானியம். அஹூரா மஸ்தா என்னும் சொராஸ்ட்ரானியர்களின் கடவுளை வழிபடுகையில் சூரியன், நெருப்பு, ஒளி என ஏதாவதொன்று இருக்கும் திசையை நோக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள்.

ஜொராஸ்ட்ரானிய மதத்தின் சடங்குகள் தூய்மைப்படுத்துதலை வலியுறுத்துகின்றன. தீய சக்தியான அங்க்ரா மைன்யூவை வெல்லவேண்டுமென்றால் உள்ளம், உடல், சுற்றுப்புறம் எல்லவற்றையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். நெருப்பு தூய்மையின் சிறப்புக் குறியீடு, அஹூரா மஸ்தாவையும் அவரின் ஆற்றலையும் துலக்கமுற்ற ஒளியூட்டப்பட்ட உள்ளத்தையும் சுட்டுகிறது. புனித நெருப்பின்றி எந்தச் சடங்கையும் விழாவையும் நடத்துவதில்லை ஜொராஸ்ட்ரானியர்கள்.

அகமெனிட் பேரரசைச் சேர்ந்த முதலாம் டேரியஸின் ஆட்சிக்காலத்தில் பாரசீகத்தில் முதன்மை மதமாக இருந்தது ஜொரோஸ்ட்ரானியம். பொஆமு 8ஆம் நூற்றாண்டுவாக்கில் மத்திய கிழக்காசியாவில் இஸ்லாமிய மதத்தைப் பரப்பும் செயல்பாடு தீவிரமடைந்தது. ஜொராஸ்ட்ரியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. அங்கிருந்து தப்பித்து பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் பகுதியில் வாழ்ந்தனர். அங்கும் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. கடல்வழியே இந்தியாவின் மேற்குக்  கடற்கரையிலுள்ள கத்தியவார் பகுதிக்கு வந்துசேர்ந்தனர். பின்னர் குஜராத்துக்குக் குடிபெயர்ந்தனர்.

17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு மஹாராஷ்ட்ராவின் பாம்பே நகரில் குடியமர்ந்தனர். அப்படித் தப்பிவந்தவர்கள் பார்ஸி என அழைக்கப்பட்டனர். இத்தனை நூற்றாண்டுகள் கடந்தபிறகும் தங்களின் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொண்ட இனத்தினராக வாழ்ந்துவருகின்றனர்.

*

விளக்கும் தீபமும் புராணக்கதைகளோடும் மதச் சடங்குகள், சம்பிரதாயங்களோடும் மட்டுமே தொடர்புள்ளவையல்ல. மக்களின் முன்னேற்றத்துக்கு உதவிய சிந்தனாவாதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் வாழ்க்கையில் முக்கியக் குறியீடாக விளங்கியது.

டயோஜினஸின் கைவிளக்கு

பொஆமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டயோஜினஸ் கிரேக்க தத்துவஞானி. பண்டைய துருக்கியின் சினோப் நகரில் பிறந்தவர். அவருடைய தந்தை நாணயங்களை அச்சிடும் ஆலையில் பணியாற்றியவர். மக்களின் பழக்கவழக்கங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றைப்பற்றி முரண்பாடான கருத்துகளைச் சொன்னவர் டயோஜினஸ்.

வறுமையைக் கொண்டாடினார். பிச்சையெடுத்து உண்டார். இரவில் பெரிய களிமண் ஜாடிக்குள் படுத்து உறங்கினார். தன்னுடைய எளிமையான வாழ்க்கையாலும் செயல்களாலும் ஊழலும் குழப்பமும் மலிந்த சமூகத்தையும் சமூக நிறுனவங்களையும் விமர்சனம் செய்தார். தன்னைச் சுற்றியுள்ள மக்கள் நேர்மையும் பகுத்தறியும் திறனுமற்றவர்கள் என்று நம்பினார். எனவே பகல் நேரத்தில் வீதிகளில் எரியும் விளக்கை கையிலெடுத்துச் செல்வார். ”எதற்காக இப்படிச் செய்கிறீர்களென” யாராவது கேட்டால் "நேர்மையும் நாணயமும் மிக்க மனிதனைத் தேடியலைகிறேன், இன்னும் கிடைக்கவில்லை,” என்று சொல்வார். 

*

கைவிளக்கேந்திய காரிகை

வரலாற்றில் இடம்பிடித்த விளக்கோடு தொடர்புகொண்ட இன்னொரு ஆளுமை ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். மருத்துவருக்கு அடுத்தபடியாக நோயாளிகளைப் பராமரிக்கும் சேவையைச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் செவிலியர்கள். சொல்லப்போனால், மருத்துவர்களைவிடவும் நோயுற்றவர்களின் அருகிலிருந்து சேவைசெய்பவர்கள் இவர்கள்தாம். நவீனகாலச் செவிலிப் பணியின் முன்னோடியாகக் கருதப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் எழுதிய செவிலியர் கையேடு இன்றுவரையில் உலகமுழுவதுமுள்ள செவிலியர்களால் பயன்படுத்தப்படுகிறது. புள்ளியியலிலும் சிறந்து விளங்கினார்.

1820ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தார் ஃபிளாரன்ஸ். சிறு வயதில் இறைநம்பிக்கையில் அமைதியை நாடினார். 16வது வயது முதல் மனிதர்களின் துன்பங்களையும் வேதனைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுமாறு இறைவனிட்ட கட்டளைக்கிணங்கி செவிலியர் பணியைச் செய்யத்தொடங்கினார். நோய்வாய்ப்பட்டவர்களைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்வதற்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு திருமண வாழ்க்கையைத் தவிர்த்தார்.

1853ஆம் ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற கிரிமியன் போரில் அடிபட்டும் நோய்வாய்ப்பட்டும் கிடக்கும் இராணுவ வீரர்களுக்குச் சேவைசெய்யும் பணியில் முழுமூச்சாக இறங்கினார். இரவு நேரங்களில் கையில் விளக்கொன்றை ஏந்தியபடி மருத்துவமனை முழுவதும் சென்று நோயுற்றவர்களுக்கு ஆறுதலாக இருந்தார். அதனால் ’கைவிளக்கேந்திய காரிகை’ என்ற சிறப்பு அடைமொழியைப் பெற்றவர். செவிலியர்ப் பணிக்கெனத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

*

ஆதிமனிதனின் அடிப்படையான பயன்பாட்டிலிருந்து பல்லாயிரம் நூற்றாண்டுகளைக் கடந்து நெருப்பின் ஒளியை இறை, அறிவு, ஆற்றல், அரவணைப்பு, கதகதப்பு என்ற பண்பட்ட, முதிர்ச்சியுற்ற கோட்பாடுகளோடு பொருத்திப் பார்க்கும் நிலையை அடைந்திருக்கிறோம். இந்தத் தீபாவளித் திருநாளில் அறியாமை இருளிலிருந்து ஒளியை நோக்கிப் பயணிப்போம், மெய்யல்லாதவையிலிருந்து மெய்யானவற்றை நோக்கிச் செல்வோம், நிலையாமையிலிருந்து நிலைபெற்றிருக்கும் தன்மையை அடைவோம். எல்லோரும் இன்புற்றிருப்போம்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக